ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணம் கடத்தலா? 108க்கும் கட்டுப்பாடுகள்!

 

-MMH

        தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், அன்பளிப்புகள், பணம் உள்ளிட்டவைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்று வழங்குவதற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் பல தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் பரிசுப் பொருட்கள், அன்பளிப்புகள், பணம் கொண்டு சென்றதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ள நிறுவனங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான குறிப்புகள் ஒட்டப்பட்டு வருகிறது. அதன்படி, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நபர் மற்றும் அவருக்கு உதவியாக ஒரே ஒரு நபரை மட்டும் ஏற்ற வேண்டும்.

தேவையில்லாத பொருட்கள் மற்றும் பைகளை சிகிச்சை பெறும் நபருடன் ஏற்றக்கூடாது. நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வரும்போது, சந்தேகத்தின் பேரில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், காவல்துறையினர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலான குழுக்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பிற குழுவினர் வாகனங்களை நிறுத்தும் நிலை ஏற்பட்டால், 

அவர்களில் ஒருவரை மட்டும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைவில் வர வேண்டும். மருத்துவமனையில் நோயாளியை சிகிச்சைக்காக அனுமதித்த பிறகு, தேர்தல் அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் அடங்கிய குறிப்புகள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உள்பகுதி மற்றும் வௌிப்பகுதிகளில் தெரியுமாறு ஒட்ட வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ள நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

-பாரூக்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments