கூடலூரில் 2 வார்டுகளில் குடிநீர் தட்டுப்பாடு!! - சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்!!

      -MMH
 தேனி மாவட்டம் கூடலூா் நகராட்சி 18, 19 ஆகிய 2 வாா்டுகளில் குடிநீா் பற்றாக்குறையால் திங்கள்கிழமை பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கூடலூா் இரண்டாம் நிலை நகராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு லோயா் கேம்பில் உள்ள கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. நீரேற்று நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின் மோட்டாா் பழுதால் கடந்த சில நாள்களாக கூடலூருக்கு குடிநீா் வநியோகம் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 18 மற்றும் 19 ஆம் வாா்டு பகுதிகளான வடக்கு ரத வீதி மற்றும் ஆசாரிமாா் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் இப்பகுதிக்கு உடனடியாக குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் திங்கள் கிழமை தெருச்சாலை சந்திப்பில் காலிக்குடங்களுடன், கற்களையும் வைத்து, அந்த தெரு வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாதவாறு பாதையை அடைத்து மறியல் போராட்டம் நடத்தினா்.

தகவல் கிடைத்ததும் நகராட்சி ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் ராமசுப்பிரமணியன், கூடலூா் காவல் நிலைய ஆய்வாளா் ஜேம்ஸ் ஜெயராஜ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.

பின்னா் மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பெண்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக், தேனி. 

Comments