சென்னை தாம்பரத்தில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா பள்ளிக்கு விடுமுறை!!

      -MMH
      சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரை தொடர்ந்து ஆசிரியை உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஒரே பள்ளிக்கூடத்தில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பள்ளியில் ஆய்வு செய்தனர். தாம்பரம் நகராட்சி சுகாதார ஊழியர்கள் பள்ளி முழுவதும் கிரிமிநாசினி தெளித்து நோய்த்தொற்று பரவாமல் நடவடிக்கை எடுத்தனர்.

3 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நேற்று முதல் அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மீண்டும் 22-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி திறக்கப்படும் என பள்ளியின் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

இதைதொடர்ந்து பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட 80 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments