என்னா பிளேயர் டா…கோலிக்கு அப்பறம் இவர் தான் தொடர்ந்து 4 சதம் அடிச்சுருக்காரு !
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே டிராபி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியிலிருந்து பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முப்பதுக்கும் மேற்பட்ட அணிகள் விளையாடி வருகிறது. தற்போது இந்த தொடர் காலிறுதி போட்டிக்கு முன்னேறி இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
டெல்லி, உத்தரகாண்ட், கர்நாடகா, கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், சௌராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. முதல் காலிறுதி போட்டியில் உத்தரகாண்ட் மற்றும் டெல்லி அணி மோதியது. இதில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில் கர்நாடகா மற்றும் கேரளா அணிகள் மோதியது.
இதில் டாஸ் வென்ற கேரள அணி கேப்டன் சச்சின் பேபி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணியின் தொடக்க வீரர்களான சாம்ராத் மற்றும் தேவ்தட் படிக்கல் அதிரடியாக விளையாடி இருவரும் சதம் விளாசி இருக்கின்றனர். இதில் சாம்ராட் 158 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 192 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து படிக்கல் 119 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி இருக்கிறார். இறுதியாக கர்நாடக அணி 338 ரன்கள் குவித்தது. இதன் பிறகு களமிறங்கிய கேரளா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 258 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வி அடைந்தது. கேரளா அணி சார்பாக கோவிந்த் 92 ரன்களும் அசாருதீன் 52 ரன்களும் குவித்திருக்கிறார்.
இந்த போட்டியில் படிக்கல் சதம் விளாசியதன் மூலம் இந்த ஆண்டு விஜய் ஹசாரே டிராபி தொடரில் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் ஒடிசாவிற்கு எதிரான போட்டியில் 152 ரன்கள், கேரளாவுக்கு எதிரான 126 ரன்கள் மற்றும் ரயில்வே அணிக்கு எதிராக 145 குவித்திருக்கிறார் படிக்கல். இந்தத் தொடரில் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி இருக்கும் படிக்கல் 673 ரன்கள் குவித்திருக்கிறார்.
இதன்மூலம் முதல்தர போட்டியில் தொடர்ந்து 4 சதம் விளாசிய வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில், 2008 – 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் இந்திய அணியின் தற்போது கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி 4 சதங்களை (102,119,124, 114) விளாசி இருக்கிறார். அவருக்குப்பின் தற்போது அந்த பட்டியலில் படிக்கல் இடம் பெற்றிருக்கிறார்.
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments