ஆபாச படம் அனுப்பி பெண் வேட்பாளருக்கு மிரட்டல்!
தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் நிறுவனரான வீரலட்சுமி, தனக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சென்னை மாவட்டம், ராமாபுரத்தை சேர்ந்த வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் நிறுவனராக இருந்து வருகிறார். தற்போது "மை இந்தியா கட்சி" சார்பாக பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், வீரலட்சுமி பம்மல் பகுதியில் 21ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்டு வந்த போது, அவரது செல்போன் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். இது குறித்து வீரலட்சுமி, சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வீடியோ பதிவு ஒன்றினை வீரலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஆபாச வீடியோ அனுப்பிய நபரை மூன்று நாள்களில் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் நானே அந்த நபரை கண்டு பிடித்து, தூக்கி வந்து, நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன்” எனக் கூறியுள்ளார்.
-பாரூக்.
Comments