அந்த சூப்பர் ரிசல்ட்.. உற்சாகமான திமுக.. வேலுமணிக்கு எதிராக களம் இறங்கிய பின்னணி!!
கோவை: 2019 லோக்சபா தேர்தலில் தொண்டாமுத்தூரில் திமுக பெற்ற அதிக வாக்குகள் காரணமாகவே உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை வீழ்த்த திமுகவே களம் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க அதிமுக தலைவரான உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியில் கடந்த இரண்டும் முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், அவருக்கு சவால் விடும்விதமாக திமுக சார்பில் அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களமிறக்கப்பட்டுள்ளார்.
இப்போதைய நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். கடந்த காலங்களில் யார் யார் வெற்றி பெற்றார்கள். அந்த தொகுதி நிலவரம் என்னவென்பதை இப்போது பார்ப்போம். கோவை மாவட்டம், கோவைமாநகரின் புறநகர் பகுதிதான் தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில் 1952ம் ஆண்டில் இருந்து இப்போது வரையில் பார்த்தால் ஆறு முறை அதிகமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ் தலா மூன்று முறை வென்றுள்ளது.
எம்ஜிஆர் ஆட்சி செய்த போது 1977, 1980, 1984 ஆகிய முறையும், ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற 1991ம் ஆண்டும், அதன்பிறகு 2011, மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு மிகவும் செல்வாக்கான இந்த தொகுதியில் கடைசி 10 ஆண்டுகளாக எஸ்பி வேலுமணி எம்எல்ஏவாக உள்ளார்.
2011ம் ஆண்டு எஸ்பி வேலுமணி தன்னை எதிர்த்து போட்டியிடட காங்கிரஸ் கட்சியின் கந்தசாமியைவிட சுமார் 56 ஆயிரம்வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016ம் ஆண்டு தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சையத் முகமதுவைவிட சுமார் 65 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று எஸ்பி வேலுமணி வெற்றி பெற்றார். கடந்த இரண்டு தேர்தல்களில் இவர் எளிதாக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், தொகுதி மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்குதான்.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் அமைச்சர் எஸ்பி வேலுமணியை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களமிறக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் கார்த்திகேய சிவசேனாபதி. இவரை களமிறக்கி இந்த தொகுதிக்கான போட்டியை கடும் சவால் மிக்கதாக மாற்றியுள்ளது திமுக.
திமுக இப்படி சிவசேனாபதியை களம் இறக்க காரணம், 2019 லோக்சபா தேர்தலில் (பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்டது தொண்டாமுத்தூர் தொகுதி) திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம், அதிமுக வேட்பாளர் மகேந்திரனைவிட தொண்டாமுத்தூரில் 21091 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். இதை மனதில் வைத்து தான் திமுக வேலுமணிக்கு எதிராக அங்கு வேட்பாளரை நிறுத்தி உள்ளது. இதன் மூலம் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி விஐபி தொகுதியாக மாறி உள்ளது.
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹனீப்,தொண்டாமுத்தூர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.
Comments