அதிகாரிகளுக்கு கிச்சன் ரெடி..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வருவாய்துறை அதிகாரிகள், அந்தந்த தாலுகா அலுவலக வளாகத்தில் சமைத்து சாப்பிட்டு பணியாற்றுகின்றனர்.தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, வருவாய்துறை அதிகாரிகள், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால், மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி, விழிப்புணர்வு, ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இது தவிர, மாவட்ட நிர்வாகத்துக்கு உரிய தகவல்களை அனுப்புதல் உட்பட பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், நள்ளிரவு வரை பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், தொய்வு இல்லாமல் ஈடுபட, பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்திலேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.காலை, இரவு டிபனும்; மதியம் உணவும், இரண்டு முறை டீ மற்றும் பலகாரம் வழங்கப்படுகிறது.
காலை, இரவில் உப்புமா, கிச்சடி, இட்லி இவற்றில் ஏதாவது ஒன்று; மதியம் சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொரியல் சமைத்து சாப்பிடுகின்றனர். இதற்காக ஆட்கள் நியமித்து தேவையானவற்றை தயாரித்து சாப்பிட்டு தங்களது பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறை தொகுதியில் பணியாற்றும் அதிகாரிகளும் இதே பாணியை கடைபிடிக்க துவங்கியுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ஓட்டுச்சாவடி இருப்பு மையம் கண்காணிப்பு உட்பட பணிகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. பணிகளை கவனிப்பதில் நள்ளிரவு ஆவதால் உணவு தேவையான நேரத்துக்கு உட்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.'இந்நிலையில், பறக்கும்படை உட்பட குழுக்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு, இங்கேயே உணவு தயாரித்து உட்கொள்கிறோம். ஓட்டலில் சாப்பிடும் போது, ஒவ்வாமை ஏற்படுவதால், இவ்வாறு சமைத்து சாப்பிடுகிறோம்' என்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.
Comments