நான் பாஜகவை சார்ந்தவனாக கூட இல்லை என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர்- வயநாடு மணிகண்டன் அதிர்ச்சி !

 

-MMH

          கேரள சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது , இதற்கான 115 தொகுதிக்கான வேட்பாளர்களை பாரதீய ஜனதா கடந்த ஞாயிறன்று அறிவித்தது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றான பழங்குடியின ஒதுக்கீட்டு தொகுதியான  மானந்தவாடியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.மணிகண்டன் தான் பாஜகவில் உறுப்பினராகவும் இல்லை, எனக்கு போட்டியிட விருப்பமும் இல்லை , எனது நண்பர்களும் - உறவினர்களும் எதிர்க்கின்றனர் எனக்கூறி  மறுத்துள்ளது கேரள ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பாஜக  மானந்தவாடி தொகுதி வேட்பாளர் பெயரை பாஜக  மணிகுட்டன் (மணிகண்டனின் பேஸ்புக் சுயவிவரத்தில் காணப்படும் பெயர்) என்ற பெயர் குறிப்பிட்டே அறிவித்திருந்தது, இதனை அறிந்த  மணிகண்டன் இது வேறு யாரையோ குறிக்கிறது என கருதி உள்ளார். உண்மையில் அவர் பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததும், தான் தேர்தலில் பாஜக சீட்டில் போட்டியிட போவது இல்லை என உடனடியாக தெளிவுபடுத்தி உள்ளார். மேலும் தான்  பாஜகவை சேர்ந்தவராகவும் இல்லை, தேர்தலில் போட்டியிட எந்த திட்டமும் இல்லை என்று மறுத்துள்ளார். 

மணிகண்டன் வெளியேறியதால், வயநாட்டில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றான மானந்தவாடியிலும்,பத்தேரி தொகுதியிலும் வேட்பாளர்கள் பெயரளவிற்கு கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள கல்பேட்டா இடத்திற்கு மட்டுமே ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

-நவாஸ்.

Comments