சிங்கம்புணரி சுற்றுவட்டார மக்களுக்கு நற்செய்தி! பிரான்மலையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் துவங்கியது!

 

-MMH

சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று முதல் (01/03/21) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக மாவட்ட சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக, இன்று காலை பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

கடந்த ஓராண்டாக கொரோனா  நோய்த்தொற்றின் காரணமாக    மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிப்படைந்து தற்பொழுதுதான்  பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றின்  காரணமாக 60 வயதுக்கு  மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் (சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் இதர நாள்பட்ட  நோய்கள்) உள்ளவர்கள்  பாதிப்படைந்து, சில  உயிரிழப்புகளும் நேர்ந்தது. தற்போது கொரோனா நோய்த்தொற்று நமது அண்டை  மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

எனவே, கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக, நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதாரத்துறை மூலமாக கொரோனா தடுப்பூசி இலவசமாக  போடப்படுகிறது. முதற்கட்டமாக 60 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும், சிங்கம்புணரியில் உள்ள  RMS.புசலி அம்மாள் தனியார் மருத்துவமனையில் ரூ.250 மதிப்பில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் கொண்டு  வரவேண்டிய ஆவணங்களாக ஆதார் கார்டு  மற்றும் வாக்காளர்  அடையாள அட்டை, இரண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வட்டார மருத்துவ அலுவலர் நபிஸா பானு தலைமையில், மருத்துவர்கள் முத்தமிழ்ச்செல்வி, பரணி ராஜன், கண்ணன், சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் மற்றும் செவிலியர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments