தேர்தலையே திருடும் கட்சி பா.ஜ.க! ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

-MMH

           ல மாநிலங்களில் அரசியலை சில்லறை வியாபாரமாக செய்து வரும் பாஜக, தமிழகக்தில் மொத்த வியாபாரமாக செய்ய முயன்று வருகிறது என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். காரைக்குடியில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது, 'தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற திசையை நோக்கி அனைவரும் பயணிக்கின்றனர்.

10 ஆண்டுகால அவலத்தை முழுமையாக உடைத்தெறிய வேண்டும். தற்போது தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும், தமிழ்மொழிக்கும் பேராபத்து ஏற்பட்டு வருகிறது என எச்சரிக்க விரும்புகிறேன். பேராபத்தை ஏற்படுத்தும் நச்சுச்செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தேர்தலையே திருடும் கட்சி பாஜக.  இதனை ஒரு உயர்ந்த கலையாகவே நினைத்து செயல்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் அரசியலை சில்லறை வியாபாரமாக செய்து வரும் பாஜக, தமிழகக்தில் மொத்த வியாபாரமாக செய்ய முயன்று வருகிறது. அ.தி.மு.க. தலைமை ஆட்சியையும், கட்சியையும் அவர்களிடம் அடமானம் வைக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு பல்வேறு அவசர அறிவிப்புகளை வெளியிட்டார். வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியிடம் அனுமதிபெற வேண்டும். இவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள்.

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டம் சர்ச்சைக்குரிய சட்டம். இதனை நாடே எதிர்க்கிறது. இச்சட்டம் சுப்ரீம் கோர்ட்டால் செல்லாது என அறிவிக்கப்படும் நாள் விரைவில் வரும். அச்சட்டத்தை ஆதரிக்கும் அ.தி.மு.க. தன்னை சிறுபான்மையினரின் காவலன் என்று கூறிக் கொள்வது அபத்தமானது.

பாஜக இந்துக்களை, முஸ்லிம்களை, கிறிஸ்தவர்ளை வேறுபடுத்தி பிரித்துப் பார்க்கிறது. என்னை கண்டம் துண்டமாக வெட்டிப்போட்டாலும் இதனை நான் ஏற்க மாட்டேன். பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர், பெண்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும், சட்ட நீதிமன்றங்களுக்கும், சமூகத்திற்கும் பாதுகாப்பில்லை. தமிழ்மொழியை, தமிழ் இனத்தை பாதுகாக்க வெகுண்டெழுந்து வாக்களியுங்கள்' என்று அவர் பேசினார்.

-பாரூக், சிவகங்கை.

Comments