திருப்பத்தூர் அருகே கொத்துக்கொத்தாக தேனீக்கள் தாக்குதல்! முதியவர் சாவு!

 

-MMH

         சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நெடுமரம் மலையரசி அம்மன் கோயிலில் பங்குனி மாதம் முதல் நாளில் திருவிழா மண்டகப்படியையொட்டி, கடந்த 14ஆம் தேதி பிரசாதம் வழங்குவதற்காக கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். அதற்காக கோவிலின் அருகில் சோலையன் (60) என்ற முதியவர் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அருகிலிருந்த புளியமரத்திலிருந்து கொத்துக்கொத்தாக வந்த தேனீக்கள் முதியவரை கொட்டின. பின்பு அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த செல்லத்துரை (55) என்ற முதியவரையும் கொட்டின. 

இவர்கள் இருவரின் அலறல் சப்தம் கேட்டு அருகில் வீட்டிலிருந்து வந்த சின்னையா (70) என்ற முதியவரையும் தேனீக்கள் விரட்டி விரட்டிக் கொட்டின. இதில் சின்னையா கை, கால், முகம் என உடல் முழுவதும் தேனீக்களால் தாக்கப்பட்டார். சின்னையாவைக் காப்பாற்ற போர்வையுடன் வந்த அவரது மனைவி சரோஜாவையும் (67) தேனீக்கள் கொட்டியது. இதனால் மயக்கமுற்ற 4 பேரையும் உறவினர்கள் திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த சின்னையாவை சிவகங்கை அரசு மருத்து கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இரண்டு நாட்களாக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, நள்ளிரவில் சின்னையா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்த நெடுமரம் கிராமத்தில் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments