உதிக்கும் சூரியன்! தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு முடிவுகள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்ற கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றி பெறும் முனைப்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதேசமயம், தேர்தலில் மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறியும் பொருட்டு தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், செய்தித் தொலைக்காட்சி நிறுவனமான புதிய தலைமுறை நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில், திமுக கூட்டணி 151-158 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 76-83 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. எதிர்வரவுள்ள தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 28.48% பேர் வாக்களிப்பேன் என்றும், திமுக கூட்டணிக்கு 38.20% பேர் வாக்களிப்பேன் என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல், மநீம கூட்டணிக்கு 6.30%, சசிகலா ஆதரவு அணிக்கு 1.09%, நாம் தமிழர் கட்சிக்கு 4.84%, மற்றவைக்கு 9.53% பேரும் வாக்களிப்பேன் என்றும், தெரியாது என்று 11.56% பேரும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்று 37.51% பேரும், எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று 28.33% பேரும், கமல்ஹாசன் வர வேண்டும் என்று 6.45% பேரும், சீமான் வர வேண்டும் என்று 4.93% பேரும், சசிகலா என்று 1.33% பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பதற்கு முன்பே இந்தக் கருத்துக் கணிப்பு மக்களிடம் நடத்தப்பட்டதால் அவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை தெரிவித்துள்ளது.
-பாரூக்.
Comments