கோவையில் கொரோனா தடுப்பூசி போட தற்காலிக ஆஸ்பத்திரிகள் திறப்பு..!!

     -MMH
     உலகை மிரட்டிய கொரோனா பரவல் கிடுகிடுவென குறைந்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து காணப்பட்டது. 2-வது அலையால் மீண்டும் பொதுமுடக்கத்தை நோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் உள்ள சிறு ஆஸ்பத்திரிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் ஜனவரி 16-ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியாளர்களைத் தொடர்ந்து பொது மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்பட 10 இடங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியதையடுத்து கோவையில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் என 152 மையங்களில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் திடீரென கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் ஏற்கெனவே 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சிறு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சிங்காநல்லூர் நெசவாளர் காலனி, மசக்காளிபாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், கணபதி, டாடாபாத், பூசாரிபாளையம், செல்வபுரம் ஆகிய இடங்களிலுள்ள சிறு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று காலை அம்மா மினி கிளினிக், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அந்த பகுதியில் திறக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

- கிரி,தலைமை நிருபர்.

Comments