ஆசிரியர்கள் வாக்களிக்க வசதியாக சொந்தத் தொகுதியிலேயே பணியமர்த்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!!

 

     -MMH

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.



வாக்குச்சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர். இவர்களில் 80 விழுக்காடுக்கு மேல் பெண் ஆசிரியர்கள் என்பதாலும், மின்னணு இயந்திரத்திலேயே வாக்களிக்க வசதியாக அவரவர்களுக்கு வாக்குரிமை உள்ள சட்டமன்றத் தொகுதியிலேயே பணியமர்த்த வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:

"தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள  சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் தொகுதி மாற்றி பணி வழங்குவதால் சுமார் 100கி.மீட்டருக்கு அப்பால் பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. 

மேலும் தேர்தலுக்கு முதல் நாள் அன்றுதான் வாக்குச்சாவடிக்கான பணியாணை வழங்குவதால், பணியாற்றும் வாக்குச்சாவடியைக் கண்டறிந்து பணிக்கு செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பலர் வாக்களிப்பதை தவிர்த்து வருகின்றனர். இது தேர்தல் ஆணையத்தின் 100 சதவீத வாக்களிப்பு நோக்கத்தை நிறைவேற்ற தடைகல்லாக உள்ளது. 

மேலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பேருந்து வசதியில்லாத குக்கிராமங்களில் உள்ளதால் வாக்குச்சாவடியை அடையாளம் காண்பது, தேர்தல் பணிக்கு செல்வதும், பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவதும் பெரிய சவலாகவே உள்ளது. குறிப்பாக பெண் ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் தனக்கு உதவியாக மற்றொருவரை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இருவரது வாக்களிக்கும் உரிமையும் பறிபோகிறது. 

எனவே ஆசிரியர்கள் பணியாற்றும் ஒன்றியங்களை மட்டும் மாற்றி வாக்குரிமை உள்ள சட்டமன்றத் தொகுதியிலேயே பணியமர்த்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணிச்சான்றினை வைத்து தங்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையங்களிலேயே தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்களிக்க முடியும். இதனால் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களின் வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்படுவதோடு தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும். எனவே மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியினை அந்தந்த சட்டமன்ற தொகுதிகளிலேயே வழங்க வேண்டும். மேலும் மண்டல அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்ல உரிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments