சிங்கம்புணரியில் பிரம்மாண்ட இளவட்ட மஞ்சுவிரட்டு! 1000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு!

 

     -MMH

சிங்கம்புணரியில் இளவட்ட மஞ்சு விரட்டு ஆண்டுதோறும் பங்குனி மாதம் கடைவீதியில் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படவில்லை.

இந்தாண்டு மார்ச் 26ஆம் தேதி சேவுகப்பெருமாள் கோயில் நிலத்தில் பெரிய அளவில் நடத்த முடிவு செய்யப்பட்டு, தேர்தல் காரணமாக ஏப்.7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு, நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கிராமத்தார் சார்பில் சந்திவீரன்கூடம் கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக மஞ்சுவிரட்டு திடலுக்கு ஜவுளி எடுத்து வரப்பட்டது. வாடிவாசலில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் காலைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு, நேற்று காலை 10.30 மணிக்கு சேவுகப்பெருமாள் கோயில் காளைகள்  அவிழ்த்து விடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1000 மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஏராளமான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினார்கள். இந்த மஞ்சுவிரட்டை பார்க்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டிருந்தனர்.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்களிடம் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 30க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

- அப்துல்சலாம், ராயல் ஹமீது.

Comments