திருப்பத்தூர் அருகே வி.ஏ.ஓ வாங்கிய லஞ்சம் ரூ.200! கிடைத்த தண்டனை 4 ஆண்டு சிறை!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே 2006ஆம் ஆண்டு, புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு ₹.200 லஞ்சம் வாங்கிய வழக்கில், கிராம நிர்வாக அலுவலர் நாடிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூரை அடுத்துள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் விசாலாட்சி. இவர் கடந்த 2006ஆம் ஆண்டு ரேசன் கார்டிற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், நடுவிக்கோட்டை கீழையூர் கிராம நிர்வாக அலுவலராக அப்போது பணியிலிருந்த நாடிமுத்து, விசாலாட்சியிடம் ரேசன் கார்டு வழங்க ₹.200 லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு விசாலாட்சி தகவல் அளித்தார். அவர்களின் வழிகாட்டுதல்படி ரசாயனம் தடவிய 200 ரூபாய் நோட்டுகளை வி.ஏ.ஓ நாடிமுத்துவிடம் விசாலாட்சி கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கிராம நிர்வாக அலுவலர் நாடிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ₹.2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி உதய வேலவன் தீர்ப்பளித்துள்ளார்.
-பாரூக், சிவகங்கை.
Comments