குஜராத்தில் பா.ஜ.கவின் 25 வருட ஆட்சியில் ஒரு அரசு மருத்துவமனை கூட கட்டப்படவில்லை! இதுதான் குஜராத் மாடல் லட்சணம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்துறையின் படுதோல்வியால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன.
பிற மாநிலங்களை விட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பும், இறப்பும் அதிகரிப்பதற்கு மோசமான மருத்துவக் கட்டமைப்பே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்டு வருவதாக பேசிவரும் பிரதமரின் சொந்த ஊரில்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு திணறி வருகிறது.
மோடி முதன்முதலாக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் பிரச்சாரங்களில், அனைத்து மாநிலங்களையும் குஜராத் போல மாற்றுவேன். இந்தியாவிற்கே குஜராத் ஒருமுன்மாதிரி மாநிலம் எனக் கூறி. ‘குஜராத் மாடல்’ என்ற வெற்று விளம்பரத்தை நாடு முமுவதும் பரப்பி ஆட்சியைப் பிடித்தார்.
பிரதமர் மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க சுமார் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கிறது. அதில் 13 வருடங்கள் நரேந்திர மோடிதான் முதல்வராக இருந்து வந்தார். அதன் விளைவே பிரதமராக மோடி இன்று இரண்டாவது முறையாக அரியணையில் அமர்ந்திருக்கிறார்.
நாட்டிலேயே அசுர வளர்ச்சி அடைந்த மாநிலம் என்றால் அது குஜராத்தான் என மேடைகளில் பேசிய பா.ஜ.க தலைவர்கள் இன்று பலரும் அந்த வார்த்தையை மீண்டும் சொல்லக் கூச்சப்படும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். அந்த அளவிற்கு அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் மோடி அரசின் வெற்று விளம்பரம் தான் ‘குஜராத் மாடல்’ என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சதவ் கூறுகையில், “குஜராத் நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. மோடி 2014ல் சொன்ன குஜராத் மாடல் நாட்டுமக்களுக்கு என்னவென்று புரியாமல் இருந்திருக்கும்.
ஆனால், இப்போது அனைவரும் குஜராத் மாடல் என்பது வெற்று விளம்பரம் எனப் புரிந்துகொண்டிருப்பார்கள். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மோடி 13 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். பா.ஜ.க 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் அத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும்,
ஒரு அரசு மருத்துவமனை கூட கட்டப்படவில்லை. இன்னும் கூட சுமார் 18 மாவட்டங்களில் சி.டி.ஸ்கேன் எடுக்கும் வசதிகூட இல்லை. இதை அந்த மாநிலத்தின் துணை முதல்வரே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதேவேளையில் குஜராத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிதான் பெருகியிருக்கிறது. இதன் மூலம் மக்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
இந்த நிலையில் உள்ள குஜராத்தை வைத்துக்கொண்டு, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் குஜராத் மாடல் என்று புராணம் பாடிக் கொண்டிருப்பதை நிறுத்தவேண்டும். ஏனென்றால் அது வேடிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
-பாரூக்.
Comments