காளையார்கோவில் அருகே கார் விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி! 8 பேர் படுகாயம்!
மதுரை தத்தனேரியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (52). இவருடைய மனைவி அல்லிராணி (45). இவர்களது மகன் பசும்பொன் (26). முத்துராமலிங்கம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மதுரையிலிருந்து, ராமநாதபுரம் மாவட்டம் திருவொற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு சாமி கும்பிட நேற்று காலை காரில் சென்றார்.
காரை பசும்பொன் ஓட்டிச் சென்றார். மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில், காளையார்கோவிலை அடுத்த உலக ஊரணி கிராமத்தின் அருகே அவர்களது வாகனம் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி, சாலைேயார பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காருக்குள் இருந்த அல்லிராணி, அவரது உறவினர்கள் மதுரை முல்லை நகரை சேர்ந்த ராஜா(52), ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த ஆறுமுகம்(65) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வாகனத்தை இயக்கிய பசும்பொன் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காளையார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments