3 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கொலை! வாக்களிக்க வந்தபோது சிக்கிய குற்றவாளிகள்!

 

-MMH

         முகம் அடையாளம் காண முடியாததால் மூன்றாண்டுகளாக முடிக்கப்படாத, இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மனைவியின் திருமணம் தாண்டிய உறவு கொலைக்குக் காரணமாக இருப்பது போலீஸாரை அதிர வைத்துள்ளது.

கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி முடக்குசாலை அருகே கடந்த, 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி 9ஆம் தேதி அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மர்ம நபர்களால் காட்டுப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன், முகம் சிதைக்கப்பட்ட 36 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில், கரூர் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த விசாரணையில் கொலையுண்ட இளைஞர் யார், அவரை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் திக்குத் தெரியாமல் நின்ற போலீஸாருக்கு, அந்த இளைஞரின் இடது கையில் கே.எஸ்.தன்யாஸ்ரீ என்ற பெயர் பச்சை குத்தப்பட்டு இருந்த வாசகங்கள் மட்டுமே க்ளுவாக இருந்தது.

இந்தக் க்ளூவை வைத்து, முகம் தெரியாத, கே.எஸ்.தன்யஸ்ரீ என்று இடது கையில் பச்சை குத்திய அந்த இளைஞர் குறித்து ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸார் அடையாளம் காணும் பணியை துவக்கினார். இதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்களில் அதனை சுவர் விளம்பரப்படுத்தினர்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கரூர் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் ஒன்று கிடைத்தது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் கணபதிபாளையத்தில் பழச்சாறு கடை நடத்திவந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் மூன்று ஆண்டுகளாக காணவில்லை என்ற தகவல்தான் அது.

இதனால், நிமிர்ந்து உட்கார்ந்த போலீஸார் திருப்பூர் மாவட்டம், கணபதிபாளையம் பகுதிக்கு தனிப்படை போலீஸார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவர் குடும்பத்துடன் தங்கி பழச்சாறு கடை நடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட சுப்புராஜ் குடும்பத்திற்கு அதே பகுதியில் கறிக்கடை நடத்திவந்த கரூரை சேர்ந்த கனகராஜ் என்பவர் நெருக்கமாக பழகி வந்ததும், அவரையும் சில ஆண்டுகளாக அப்பகுதியில் காணவில்லை என அப்பகுதியில் வசித்தவர்கள் தெரிவித்தனர். பின்னர், கொலை செய்யப்பட்ட சுப்புராஜின் மனைவியிடம் கோவில்பட்டியில் போலீஸார் விசாரணை செய்தபோது, தனது கணவர் சுப்புராஜ் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியிருக்கிறார்.

இதனால், தனிப்படை போலீஸார், சுப்புராஜின் மனைவி அன்னலட்சுமி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். மேலும், செல்போன் எண்களை ஆய்வு செய்ததில், சுப்புராஜின் எண்ணுக்கு கனகராஜ் அடிக்கடி பேசியிருப்பதும், அந்த எண் கரூர் பசுபதிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சணபிரட்டி பகுதியில் சிக்னல்கள் பதிவாகியிருந்தது. இதனடிப்படையில், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு, பல அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்தன. கரூர் மாவட்டம், சணபிரட்டி பகுதியில் கொலை செய்யப்பட்ட சுப்புராஜின் மனைவி அன்னலட்சுமி மற்றும் அவரது தாய் ஜெயலலிதா மற்றும் இரு குழந்தைகளுடன் குடியிருந்ததாகவும் போலீஸாருக்கு கூடுதல் தகவல் கிடைத்தது.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கனகராஜ் பயன்படுத்திய செல்போன் எண்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை என்பதால், போலீஸாருக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதனிடையே, நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, ஏப்ரல் 6ஆம் தேதி கரூர் சணபிரட்டி வாக்குச்சாவடி மையத்திற்கு கனகராஜ் வந்த போது, போலீஸார் அவரை பிடித்தனர். பின்னர், கனகராஜிடம் நடத்திய தீவிர விசாரணையில், சுப்புராஜ் மனைவி அன்னலட்சுமியுடன் தொடர்பு இருந்ததும், அதனை சுப்புராஜ் கண்டித்ததால், சுப்புராஜை கரூர் வரவழைத்து, தனது நண்பர்கள் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து, யாரும் இல்லாத காட்டுப் பகுதியான புலியூர் முடக்கு சாலைக்கு அழைத்துச் சென்று, வெட்டி படுகொலை செய்து விட்டு சென்னை சென்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

இதனையடுத்து, நேற்று ஏப்ரல் 12ஆம் தேதி, கரூர் பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார், கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக கனகராஜ் மனைவி அன்னலட்சுமி, மாமியார் ஜெயலலிதா, கொலைக்கு உடந்தையாக இருந்த பிரகாஷ், சந்தோஷ் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகள் 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

-ராயல் ஹமீது.

Comments