பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் துணிகரம்! கார் கண்ணாடியை உடைத்து பட்டபகலில் ரூ.4 லட்சம் கொள்ளை!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பட்டபகலில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த திமுக பிரமுகரின் காரின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்து 4.லட்சம் கொள்ளை. நெருஞ்சிகுடியைச் சேர்ந்த திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சக்திவேல். அவர் நேற்று காலை பொன்னமராவதியில் உள்ள ஒரு வங்கியிலிருந்து ரூ.4,60,000 எடுத்தார்.
அந்தப் பணத்தை தனது காரில் வைத்து விட்டு, பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் தனது காரை நிறுத்தி விட்டு ரூ.60,000த்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள துணிக்கடைக்கு சென்றார். மீதமுள்ள 4 லட்சத்தை காரில் வைத்திருந்தார். துணிக்கடைக்கு சென்று திரும்பியபோது காரின் முன்பக்கக் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரைத் திறந்து பார்த்த போது 4 லட்சம் திருடு போயிருந்தது.
இதுகுறித்து பொன்னமராவதி காவல்நிலையத்தில் சக்திவேல் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் தலைமையில் துணை ஆய்வாளர் வீரமணி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது மர்மநபர் ஒருவர் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை பட்டபகலில் உடைத்து மர்மநபர்கள் யாரோ 4 லட்சத்தை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பொன்னமராவதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
-அப்துல் சலாம், திருப்பத்தூர்.
Comments