பொன்னமராவதியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் கொள்ளையடித்தவர் கைது!!

     -MMH

     புதுக்கோட்டை மாவட்டம், நெருஞ்சிகுடியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் புதுக்கோட்டை மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகிக்கிறார். இவர் சில நாட்களுக்கு முன் பொன்னமராவதியிலுள்ள ஒரு வங்கியிலிருந்து ₹.4 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பணத்தை தனது காரில் வைத்துவிட்டு, காரை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு ₹.60ஆயிரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள துணிக்கடைக்கு சென்றார். மீதமுள்ள ₹.4 லட்சத்தை காரில் வைத்திருந்தார்.

துணிக்கடைக்கு சென்று திரும்பிய போது காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். காரை திறந்து பார்த்த போது ₹.4 லட்சம் திருட்டு போயிருந்தது. (இந்தச் சம்பவ செய்தியை நாளைய வரலாறு புலனாய்வு இதழில் வெளியிட்டிருந்தோம்.

https://www.nalaiyavaralaru.page/2021/04/4_23.html?m=1)

நெருஞ்சிக்குடி சக்திவேல் பொன்னமராவதி காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில்  பொன்னமராவதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் இருவரின் மேற்பார்வையில், குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடிவந்தனர்.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பொன்னமராவதி- புதுக்கோட்டை சாலையில் வெங்களமேடு என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த சந்திரன் மகன் சரவணன்(32) என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

அதற்குப்பின் நடத்தப்பட்ட முறையான விசாரணையில், சரவணன் பொன்னமராவதியில் நாலு லட்ச ரூபாய் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.

கொள்ளையடித்த ₹.4 லட்சத்தில், ₹.3,60,000த்தை பொன்னமராவதி காவல்துறையினர் மீட்டனர். சரவணனை கைது செய்து திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments