திருப்பத்தூரில் கீழே கிடந்த ரூ.70,000! காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையாளர்! பாராட்டிய காவல் ஆய்வாளர்!
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜா. இவர் சில தினங்களுக்கு முன் இரவு 08:30 மணி அளவில் புதுக்கோட்டை சாலை வழியாக தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்த போது டூவீலரில் பணமில்லாது அதிர்ச்சி அடைந்த சண்முகராஜா, இதுகுறித்து திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அடுத்த நாள் காலை 09:30 மணிக்கு பீர்முகமது என்ற வயது முதிர்ந்த வியாபாரி, திருப்புத்தூர் நகர் காவல்நிலைத்தில், தான் மூலக்கடைவீதியில் புளியம்பழம் மொத்த வியாபாரம் செய்துவருவதாகவும், கடைக்கு அருகில் சாலையில் ₹.70 ஆயிரம் பணம் கிடந்ததாகவும், யாரேனும் தேடி வருவார்கள் என இரவில் கடையில் வைத்திருந்ததாகவும், யாரும் பணத்தை தேடி வராததால் இந்தப் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வந்ததாகவும் கூறி ஆய்வாளர் புவனேஸ்வரியிடம் ஒப்படைத்தார். அதனையடுத்து பணத்தை தவறவிட்ட சண்முகராஜாவை வரவழைத்து காவல் ஆய்வாளர் ₹.70 ஆயிரத்தை ஒப்படைத்தார்.
சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியம்பழ வியாபாரியை பாராட்டும் வகையில், திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, பீர்முகமதுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி நன்றி கூறினார். உடன் சார்பு ஆய்வாளர் பிரிட்டோ, சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் கண்ணன், தலைமைக்காவலர் வடிவு ஆகியோர் உடன் இருந்தனர்.
-அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments