சாதுர்ய கொள்ளையர் பராக்! ATM pin எண்ணை உடனே மாற்றுங்கள்! முக்கிய ஆவணமா? கவனமாகக் கையாளுங்கள்!

     -MMH

சென்னை அடையாறில் ஏ.டி.எம் கார்டை திருடி அதன்மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை சாதூர்யமாக கொள்ளையடித்த நபரைக்  காவல்துறையினர் சி.சி.டி.வி காமரா உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அடையாறில் உள்ள பிரபல துணிக்கடையில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர் கடந்த 2 ஆம் தேதி தனது அலுவல் பணிக்கு வரும்போது தனது இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில் தனது ஏ.டி.எம் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர ஆவணங்களை வைத்துவிட்டு அவரசத்தில் சரியாக பூட்டாமல் சென்றுள்ளார்.


இந்நிலையில் அவர் பணியில் இருந்தபோது மாலை 3 மணியளவில் மொபைலுக்கு அவரது கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டதாக தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக அடையாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி காமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் குரோம்பேட்டை நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த முகமது இம்ரான் என்பவர்தான் குற்றவாளி என்பதைக் கண்டறிந்த  காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்தனர். மேலும், Pin  நம்பரின்றி (ATM PIN) எவ்வாறு பணத்தை ஏ.டி.எம் ல் இருந்து எடுத்தார் என்பது குறித்து விசாரித்தனர்.

விசாரணையில் முகமது இம்ரான் சரியாகப்  பூட்டாமல் இருந்த  வண்டியில் இருந்து  ஏ.டி.எம் உள்ளிட்ட ஆவணங்களைக்  கண்டதும் அதனை எடுத்துக்கொண்டு ஏ.டி.எம் சென்று வங்கிக் கணக்கு புத்தகத்திலிருந்த பழைய பின் நம்பரைப் பயன்படுத்த,   அப்பெண் Pinஐ மாற்றியிருந்ததால் பணம் வரவில்லை.

மேலும், என்ன செய்வது என யோசித்த  முகமது இம்ரான் அப்பெண்ணின் ஓட்டுநர் உரிமம் தன்னிடம் இருப்பதை உணர்ந்து அதிலிருந்த பிறந்த ஆண்டை பயன்படுத்தி முயன்றிருக்கிறான். அவன் கணக்கு தப்பவில்லை.  பெண்ணின் பிறந்த ஆண்டும் ஏ.டி.எம் Pinம் ஒத்துப்போனது. பிறகென்ன? 'சுளைசுளை'யாக  பணத்தைச் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விட்டான். 

முகமது இம்ரான் மீது ஏற்கனவே குரோம்பேட்டை காவல் நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் செயின் பறிப்பு, பூட்டிய வண்டியில் பூட்டை உடைத்து திருடுவது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவனை அடையாறு காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் நம்முடைய அலட்சியம்,  கவனக்குறைவு,  சோம்பேறித்தனம் என்றிவையே நம் துன்பத்துக்குக் காரணம் என்பதையே உணர்த்துகிறது. இனியேனும் விழித்துக் கொள்வோம். சுலபமாக கணிக்கக்  கூடிய கடவு எண்/ வண்டி எண் / பிறந்த ஆண்டு / திருமண ஆண்டு / கைப்பேசி எண் இவைகளை ATM  Pin எண்ணாக வைத்திருந்தால் உடனடியாக மாற்றி விடுங்கள். அதைவிட, முக்கிய ஆவணங்களை வெளியே கொண்டுவர நேர்ந்தால்  கவனமாக இருங்கள் மக்களே!

விழிப்புணர்வுக்காக,

-சோலை ஜெய்க்குமார், Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments