பஜக வேட்பாளர் வானதி சீனிவாசனைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிக்கை! கோவை கலவர எதிரொலி!
கோவை: உத்தரப் பிரதேச முதல்வர் கோவை வருகையை முன்னிட்டு, கடையை மூட வலியுறுத்தி கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் நேற்று (31-ம் தேதி) பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதற்காக புலியகுளம் வந்த அவர், அங்கிருந்த வாகனப் பேரணியில் கலந்து கொண்டு, பிரச்சாரக் கூட்டம் நடக்கும், ராஜவீதி தேர்முட்டி திடலுக்கு வந்தார். அந்த இருசக்கர வாகனப் பேரணியில் வந்த வாகனங்கள், பெரியகடை வீதியில் இருந்து நேராக சென்று, ஒப்பணக்கார வீதியில் வலதுபுறம் திரும்பி, ராஜவீதியை அடைந்து தேர்முட்டிக்குச் சென்றனர்.
முன்னதாக, இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட இருசக்கர வாகனத்தில், மாநகராட்சி அலுவலகம் உள்ள பெரியகடைவீதியில் இருந்து நேராக சென்று ஒப்பணக்கார வீதியை அடைந்து வலதுபுறமாக திரும்பும் போது, அங்கு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்த, இருசக்கர வாகனப் பேரணியில் கலந்து கொண்ட ஒருவர், அங்கிருந்த கடையை மூட வலியுறுத்தி கல்வீசி தாக்கினார்.
அதைத் தொடர்ந்து கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்த தடியால், சில வியாபாரிகளைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் அங்கு வந்ததைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த பாஜகவினர் அங்கிருந்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த உக்கடம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் :
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கீம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,'' இருசக்கர வாகனங்களில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோரை பின்தொடர்ந்து வந்த, பாஜக உறுப்பினர்கள், டவுன்ஹால் பாட்டா ஷோரூம் அருகில் இருந்த வியாபாரிகளை கொடிக்கம்ப தடிகளால் தாக்கி, அங்கு இருந்த கடைகளின் மீது கல்வீசி தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்ட பாஜக கட்சியினர் மற்றும் வேட்பாளர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவர அரசியல் கலாச்சாரத்தை கையில் எடுக்கும் பாஜக வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதில் தமிழக தேர்தல் ஆணையம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' எனக் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார்;
கோவை மாவட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான எஸ்.நாகராஜனிடம் அளித்த புகார் மனுவில்,'' மேற்கண்ட விவகாரத்தில் தாக்குதல் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்ட பாஜகவினர் மற்றும் வேட்பாளர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவின் இதுபோன்ற பிரச்சாரங்கள் கோவையில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தி, அதை மத மோதல்களாக மாற்றி, தான் வெற்றி பெற்று விடலாம் என்ற திட்டத்தின் அடிப்படையிலேயே இது நடந்ததாக தெரிகிறது.
இதுபோன்றவற்றால் கோவையில் உள்ள ஜவுளித்துறைகள், நகைக்கடை, தொழில்கள் உட்பட பல்வேறு வியாபாரிகள் மற்றும் வியாபார தலங்கள் பாதிக்கும் சூழல்கள் உருவாகும்.
இவ்விவகாரம் தொடர்பாக பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்,'' எனக் கூறப்பட்டுள்ளது.
-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.
Comments