ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்புகளுக்கான வாய்ப்புகள்!!

    -MMH 

நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால், ஊரடங்கு நடைமுறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் திரையரங்குகள், பெரிய கடைகள் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நாடு முழுவதிலும் 15 சதவீதத்துக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு விகிதம் இருக்கும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கொண்டுவருவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முழு ஊரடங்கு கொண்டுவரும் பட்சத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு கடைகள் திறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறைதான் இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த வசதியாக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழக ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர்.

அப்போது, அரசின் துரித நடவடிக்கைகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பு பணிகளில் முன்னாள் ராணுவ வீரர்களையும் ஈடுபடுத்தலாம் என்று அரசுக்கு ஆலோசனை வழங்கினார். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கும், அத்தியாவசியமாக கடைகளை திறந்து வைப்பதற்கான அறிவிப்பிற்கும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 வரையில் இரவு நேர ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது. 

-பீர் முஹம்மது.

Comments