நடிகர் விவேக் திடீர் மரணம்!! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

     -MMH
     தமிழ் சினிமா உலகில் பல  வருடங்களாக நகைச்சுவை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் திரு விவேக். அவர்கள் இன்று  அதிகாலை 4:30 மணி அளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. முன்னணி கதாநாயகர்களின் தோழனாக அவர் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது. அவருடைய காமெடி  பெரும்பாலும் டைமிங் காமெடி ஆகவே இருக்கும். 

திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.

மக்களிடம் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு  தடுப்பூசி போட்டுக்கொண்டார். அப்பொழுது அவர் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல்  அரசு மருத்துவமனைக்கு சென்று மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.  

கொரோணா தடுப்பூசி  காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதா என்ற ஐயப்பாடு ரசிகர்கள் மத்தியில் எழுந்ததால் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  நடிகர் திரு விவேக் அவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டதற்கும் மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை தன்னிலை விளக்கம் அளித்துள்ளது. 

அவரது இந்த திடீர் மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

நாளைய வரலாறு செய்திக்காக,

-இராஜசேகரன்.

Comments