ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழலா? இந்திய இடைத்தரகருக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாக புதிய சர்ச்சை!
கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையேயான ரஃபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் போடப்பட்டது முதல் பல்வேறு விமர்சனங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் எதிர்கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வந்தன.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். காரணம், 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது போடப்பட்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என, 126 விமானங்கள் வாங்குவதாக ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்தபிறகு 2016-ம் ஆண்டு புதிதாக போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்ததில் ஒரு விமானத்தின் விலை 1,670 கோடி ரூபாய் என 36 விமானங்கள் மட்டுமே வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
526 கோடி ரூபாய் மதிப்புள்ள ரஃபேல் விமானத்தை ஏன் 1,670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்?
126 விமானங்களுக்குப் பதிலாக
36 விமானங்கள் வாங்கியது ஏன்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார். இதற்கு பாஜக தரப்பில் விளக்கமளிக்கையில், ‘ரூ.526 கோடிக்கு காங்கிரஸ் வாங்க நினைத்த போர் விமானங்கள், வெறுமனே பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் மட்டுமே உரியவை. ஆனால், நாங்கள் வாங்குவது, போர் தளவாடங்கள், இதர தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானங்கள். இவை அதைவிட உயர் தரத்துடன் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஒப்பந்தத்தின் 50% தொகையை டசால்ட் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி, இந்தியாவுக்காக தயாரிக்கப்படும் ரஃபேல் விமானங்களின் உதிரி பாகங்கள் இந்தியாவில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் முடிவானது. டசால்ட் ரிலையன்ஸ் எரோஸ்பேஸ்' என்ற பெயரில் நிறுவனம் உருவாக்கப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன.
முன்னதாக, இந்திய தரப்பில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், விமானத் தயாரிப்பில் அனுபவம் இல்லாத, திவாலான, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது ஏன்? என்பது உட்பட பல கேள்விகளை நாடாளுமன்றத்திலேயே எழுப்பினார் ராகுல்காந்தி.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. `இந்த நாட்டின் பாதுகாவலர் ஒரு திருடர் (சௌகிதார் சோர் ஹை)' என்று சொல்லும் அளவிற்கு ராகுல்காந்தியின் பிரசாரம் நாடெங்கும் தீயாய்ப் பரவியது. பின்னர், ரஃபேல் விவகாரம் உச்ச நீதிமன்றம்வரை சென்று, "ரஃபேல் வழக்கில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை” என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ராகுல்காந்தியும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.
இந்த நிலையில், மீண்டும் இந்த ரஃபேல் விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு இணையதளப் பத்திரிக்கையான மீடியாபார்ட் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், "ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின்போது, இந்தியாவைச் சேர்ந்த ஓர் இடைத்தரகு நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9.43 கோடி ரூபாய் தொகையை டசால்ட் (Dassault) நிறுவனம் வழங்கியிருக்கிறது" என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.
டசால்ட் நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட், அதாவது நிறுவனத்தின் மொத்த பணப்பரிவர்த்தனை ஆவணத்தில், பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்புப்பிரிவு துறை (Agence Francaise Anticorruption (AFA) மேற்கொண்ட ஆய்வில், "Gifts to Clients” என்ற கணக்கில் ஒரு தொகை குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அழுத்தம் கொடுக்கப்பட்டபோது, அந்தத் தொகை இடைத்தரகு நிறுவனத்துக்கு லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாக டசால்ட் நிறுவனம் ஒப்புக் கொண்டது என, மீடியாபார்ட் (Mediapart) பத்திரிகை தெரிவித்திருக்கிறது.
ஏற்கனவே, கடந்த 2017-ம் ஆண்டு இந்த மீடியாபார்ட் புலனாய்வு பத்திரிகை "ரஃபேல் விமான ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமென்றால், இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என இந்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது. இந்த தகவல் டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது!” என்ற செய்தியை வெளியிட்டு அதிரவைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இதில் தொடர்புடைய அந்த இடைத்தரகு நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் (Defsys) என்றும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த சுசேன் குப்தா இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சுசேன் குப்தா ஏற்கனவே விவிஐபி-க்களுக்கான விமானம் வாங்கும் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டவர். சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையால் `அகஸ்டாவெஸ்ட் லேண்ட்' விவகாரத்தில் இவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் விமான ஒப்பந்தப்படி, இதுவரையில் நான்கு தொகுதிகளாக 14 விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளன. இந்த மாத இறுதிக்குள் மேலும் 7 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தற்போது, ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், இந்த ரஃபேல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
- பாரூக்.
Comments