உஷார் மக்களே! கள்ளச்சந்தையில் போலி ரெம்டெசிவிர் மருந்து! அடையாளம் காண்பதெப்படி?

-MMH

     கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்திலும் போலியை உருவாக்கி சிலர் கள்ளச்சந்தையில் கொள்ளையடித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பலியாவோர் எண்ணிக்கை உலக நாடுகளையே கவலை அடையச் செய்துள்ளது. தற்போதைய நிலையில் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், முதியவர்களுக்கும் உயிர்காக்கும் முக்கிய மருந்தாக ரெம்டெசிவிர் உள்ளது. கொரோனா 2வது அலை கடுமையாக இருப்பதால் நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து அதிகம் தேவைப்படும் நிலையில் உள்ளது. எனவே இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

அதிகமாக இருந்த இந்த மருந்தின் விலையை சமீபத்தில் அதன் தயாரிப்பு நிறுவனங்கள் தாமாக முன்வந்து குறைத்தன. இதன்படி, குறைந்தபட்சம் ரெம்டெவிசிர் ஒரு டோஸ் ₹.899க்கு கிடைக்கிறது.

ஆனால், சிலர் இந்த மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். தற்போது மற்றொரு கும்பல் ரெம்டெசிவிர் போன்றே போலி மருந்தைத் தயாரித்து, அதை கொள்ளை லாபத்தில் விற்று, மக்கள் உயிரோடு விளையாடுகின்றனர். போலி ரெம்டெவிசிர் ஊசி மருந்தை விற்றதாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசத்தில் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து போலி ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போலிக்கும், உண்மையான ரெம்டெசிவர் மருந்துக்கும் உள்ள வித்தியாசத்தை டெல்லி போலீஸ் துணை கமிஷனர் மோனிகா பரத்வாஜ் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். மற்றவர்களும் போலி ரெம்டெசிவரை எளிதில் அடையாளம் காண வேண்டுமென்ற நோக்கத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள வித்தியாசங்கள்:

அவை,

1.போலி ரெம்டெசிவிர் மருந்து அட்டையில், ‘ரெம்டெசிவிர்’ என்ற பெயருக்கு மேலே ‘Rx’ என்ற குறியீடு இருக்காது.

2.உண்மையான மருந்து பாட்டில் அட்டையில் மருந்து பெயரின் 3வது வரியில் 100 mg/Vial என வயல் (குப்பி) என்பதன் முதல் எழுத்தான 'V' பெரிய (கேபிட்டல்) எழுத்தாக இருக்கும். இதுவே போலி மருந்தில் வயல் என்பதில் முதல் எழுந்து சிறிய 'v' எழுத்தாக அச்சிடப்பட்டுள்ளது.

3.இதன் பிராண்ட் பெயர் (கோவிஃபார்) அச்சிடப்பட்ட இடத்தில், போலி மருந்தில் அதிக இடைவெளி இருக்கும்.

4.பிராண்ட் பெயருக்கு கீழ் வரும் வயல்(Vial) என்ற இடத்திலும் முதல் எழுத்து பெரிய எழுத்தாக இல்லாமல் இருக்கும். அதே போல, ‘For use in’ என்பதிலும் முதல் எழுத்து பெரிய எழுத்தாக அச்சிடப்பட்டிருக்காது.

5.அட்டையின் பின்னால், ‘வார்னிங்’ என்ற லேபிள் உண்மையான மருந்தில் சிவப்பு நிறத்திலும், போலி மருந்தில் ‘கருப்பு’ நிறமாகவும் இருக்கும்.

6.வார்னிங் லேபிளுக்கு கீழே, ‘ஜிலீட் சயின்ஸ் நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெறப்பட்டதன் கீழ் கோவிஃபார் உற்பத்தி செய்யப்படுகிறது’ என்கிற முக்கிய தகவல் போலி மருந்தில் இடம் பெற்றிருக்காது.

7.மருந்து தயாரிப்பு நிறுவனமான ஹிட்டிரோவின் முகவரியிலும் முதல் எழுத்து பெரிய எழுத்தாக அச்சிடப்படாமல் பிழை இருக்கும். இந்தியா என்பதில் முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருக்காது.

8 அதே போல், தெலங்கானா என்பதிலும் ஆங்கில எழுத்துப்பிழைகள் இருக்கும்.

இந்த வித்தியாசங்களை வைத்து போலி ரெம்டெசிவிர் மருந்தை எளிதாக அடையாளம் காணலாம். பொதுவாக கள்ளச்சந்தையில் மருந்தை விற்பவர்களே அதிகளவில் இந்த போலி மருந்தை பயன்படுத்துகின்றனர். கள்ளத்தனமாக வாங்குபவர்களிடம், போலி மருந்தை ஏமாற்றி தருகின்றனர். அப்போதுதான் அவர்கள் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டாலும் போலீசுக்கு செல்ல மாட்டார்கள் என்பதால் இவ்வாறு தில்லுமுல்லுகள் நடக்கின்றன. எனவே, மருந்துத் தட்டுப்பாடு என குறுக்கு வழியில் கள்ளச்சந்தையில் மருந்தை வாங்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் எச்சரிக்கின்றனர்.

- பாரூக்.

Comments