பிரிட்டனிலிருந்து டெல்லிக்கு வந்தடைந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள்!!

   -MMH

பிரிட்டனிலிருந்து 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்துள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,79,257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.83 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 3,645 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2.04 லட்சமாக அதிகரித்துள்ளது. மாநிலங்களில் டெல்லியில் தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். நாடெங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவைத்தொடர்ந்து பிரிட்டனும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உள்ளது. இந்தியாவின் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், சவுதி அரேபியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவ முன்வந்தது. அதனடிப்படையில் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஏற்கனவே இந்தியாவுக்கு ஆக்சிஜன் செரிவூட்டிகளை அனுப்பி வைத்தது.

இதைத்தொடர்ந்து இன்று பிரிட்டனிலிருந்து 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள், லுஃப்தான்சா விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டன. இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்‌ஷி தெரிவித்துள்ளார்.


சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments