உங்கள் நகரம் எப்படி மாறியிருக்கிறது என தெரிய வேண்டுமா...!!

     -MMH 
     கொரோனா பாதிப்பு கவலையோடு கொஞ்சம் பூமியின் ஆரோக்கியம் பற்றி கவலையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். 'ஏன், பூமிக்கு என்ன ஆச்சு?' என கேட்பவர்கள், பருவ நிலை மாறுதலின் பாதிப்பை உணராதவர்களாகவே இருக்க வேண்டும்.

விஞ்ஞானிகளும், வல்லுநர்களும் பல ஆண்டுகளாக எச்சரித்து வரும் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை இன்னும் உணராதவர்கள், கூகுள் எர்த்தின் டைம்லேப்ஸ் வீடியோவை பார்த்தால் போதும், நாம் பூமிக்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

கூகுள் பயனாளிகள் பலரும் அதன் நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளில் ஒன்றான 'கூகுள் எர்த்' பற்றி அறிந்திருக்கலாம். ஆண்ட்ராய்டு போனில், தெரியாத இடங்களுக்கு வழி தேட உதவும் 'கூகுள் மேப்ஸ்' சேவையின் சகோதர சேவையான 'கூகுள் எர்த்', நம் பூமி உருண்டையை உள்ளங்கை நெல்லிக்கனி போல பிரவுசருக்குள் சுருக்கிப் பார்க்க வழி செய்கிறது.

செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட வெகு துல்லியமான பூமியின் பறவைப் பார்வை காட்சிகள் மூலம், பூமியை அங்குலம் அங்குலமாக ஜூம் செய்து பார்க்க கூகுள் எர்த் உதவுகிறது.

கூகுள் எர்த் சேவையை பலவிதமாக பயன்படுத்தலாம் என்றாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சேவைக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய அப்டேட் 'பூமியின் ஆரோக்கியம்' தொடர்பாக நம் கைகளை திறப்பதாக அமைந்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பாக பூமியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை படம் பிடித்துக் காட்டும் வகையிலான 'டைம் லேப்ஸ்' வீடியோ வடிவில் 'கூகுள் எர்த்'தின் புதிய அப்டேட் அமைந்துள்ளது. இந்தக் கால மாற்ற வீடியோவின் ஹைலைட் என்னவென்றால், கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பூமி எப்படி எல்லாம் மாறியிருக்கிறது என்பதைப் பார்த்து தெரிந்து கொள்வது சாத்தியமாகி இருப்பதுதான்.

பல ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதியின் காட்சியை தற்போதைய காட்சியுடன் ஒப்பிட்டு, அன்றும் இன்றும் என பார்க்க முடிந்தால், இடைப்பட்ட காலத்திலான மாற்றத்தை நன்றாக தெரிந்துகொள்ளலாம். இதேபோல ஒட்டுமொத்த பூமியும் எப்படி மாறியிருக்கிறது என்பதை ஒரு பறவைப் பார்வையாக தெரிந்துகொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் என்ப தைத்தான் 'கூகுள் எர்த் டைம் லேப்ஸ்' வீடியோ செய்கிறது.

இந்த வீடியோ உருவாக்கம் தொடர்பாக கூகுள் விரிவான வலைப்பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவின் கார்னகி மெலான் பல்கலைக்கழகத்தின் 'கிரியேட்' ஆய்வுக் கூடத்துடன் இணைந்து கூகுள் இந்த விழிப்புணர்வு டைம் லேப்ஸ் வீடியோவை உருவாக்கியிருக்கிறது.

வனப்பகுதி மாற்றம், நகர வளர்ச்சி, உஷ்ணமாகும் வெப்பநிலை, எரிசக்தி ஆற்றல்கள் மற்றும் புவியின் அழகு என ஐந்து விதமான தலைப்புகளில் இந்த மாற்றத்தை உணரலாம்.

கூகுள் எர்த் தளத்தில் அல்லது g.co/Timelapse எனும் முகவரியில் இந்த வீடியோவை அணுகலாம். வீடியோவை பார்வையிட கூகுளே பலவிதங்களில் வழிகாட்டுகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேர்வு செய்து கால மாற்ற காட்சிகளை அளிக்கிறது.

இது தவிர, உங்கள் நகரம் எப்படி மாறியிருக்கிறது என குறிப்பாக தேடிப் பார்க்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை நிறுத்தி, நிதானமாகப் பார்த்து 'பூமியின் ஆரோக்கியம்' பற்றி யோசிப்பதோடு, இந்தத் தளத்தில் உள்ள இதர 'டைம் லேப்ஸ்' வீடியோக்களையும் பார்த்து விழிப்புணர்வு பெறலாம்.

கூகுள் எர்த் முகவரி: http://goo.gle/timelapse | https://earthengine.google.com/timelapse/

கூகுள் எர்த் டைம் லேப்ஸ் பக்கத்துக்குச் சென்று உங்கள் நாடு, மாநிலம், ஊர் பெயரை தேடலில் டைப் செய்து காலத்தை சுழலவிடும் பார்க்கலாம்.

-சுரேந்தர்.

Comments