தாம்பரம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! மக்கள் கொந்தளிப்பு....!!

-MMH

            தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மேய்க்கால் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடை மற்றும் வீடுகளை அகற்ற, சேலையூர் போலீசார் உதவியுடன் நேற்று வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கபபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க தொடங்கினர். இதனையடுத்து பொதுமக்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி கடைகள் மற்றும் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் நீதிமன்றத்தில் ஒரு மாத காலம் அவகாசம் தந்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர், ஒரு மாதத்திற்குப் பின்னர் நாங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவதற்குள் பொதுமக்கள் வீடுகள் மற்றும் கடைகளை காலி செய்திருக்க வேண்டும் என தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து வருவாய்த் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, நேற்று காலை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். நோட்டீஸ் வழங்கிய சிறிது நேரத்தில் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வந்து கடைகள் மற்றும் வீடுகளை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடத் தொடங்கினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால், முன்பே நோட்டீஸ் வழங்கி குறிப்பிட்ட நாட்களுக்கு கால அவகாசம் வழங்கி அதன் பின்னரும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றால் மட்டுமே அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

ஆனால், இங்கு நேர் மாறாக நோட்டீஸ் வழங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே கட்டிடங்களை அகற்ற தொடங்கினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். எனவே, எங்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்று போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர்,’’  என குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து வருவாய்த் துறையினரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது கூறியதாவது:

தாம்பரம் அருகே வேங்கைவாசல் ஊராட்சியில் சந்தோஷபுரம் பகுதியில் சுமார் 2.40 ஏக்கர் பரப்பளவு மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சிலர் போலி ஆவணங்கள் மூலம் வீடுகள், கடைகள் கட்டி குடியிருந்தும், வாடகைக்கும் விட்டிருந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ. ஜான் லூயிஸ் உத்தரவின்படி தாம்பரம் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் நேற்று ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். முதலில் ஆக்கிரமிக்கப்பட்ட 9 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. பின்னர் 17 குடியிருப்புகளைஅகற்ற முயன்றபோது ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கும் வருவாய்த் துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆக்கிரமிப்பாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த் துறையினர் நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை 30 நாட்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வருவாய்த் துறை மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதற்கு உண்டான தொகை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என தெரிவித்தனர்.

கிரவுண்ட் ஒரு கோடி ரூபாய்:

இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறியதாவது: சந்தோஷபுரம் பகுதியில் பட்டாதாரருக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தவறு என தெரிவித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குடியிருப்பவர்கள் தாங்களாகவே வீடுகளை காலி செய்ய அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் சுமார் ஒரு கோடி வரை விற்பனையாகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லையெனில் வருவாய்த் துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதற்குண்டான செலவினம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

நாளைய வரலாறு செய்திகளுக்காக சென்னையிலிருந்து,

-H.முகமது சைஃபுல்லா.

Comments