மது புட்டிக்குள் பாம்புக் குட்டி! மருத்துவமனையில் குடிமகன்!!

-MMH

அரசு மதுபானக்கடையில் வாங்கிய மது பாட்டிலில் பாம்புக் குட்டி ஒன்று இருந்தது தெரியாமல் மது அருந்திய குடிமகன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சுரேஷ் (36). விவசாயியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இவர் சுத்தமல்லி கிராமத்தில் தனது மாமனார் வீட்டில் தங்கி, நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

சித்திரை முதல் நாளன்று மது அருந்த எண்ணிய சுரேஷ், மதியம் 2 மணியளவில் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கியுள்ளார் சுரேஷ். அதில் பாதியை குடித்துவிட்டு மீதியை வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் மது பாட்டிலை பார்த்தபோது அதில் குட்டிப் பாம்பு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுரேஷிடம் தகவல் கூறியவுடன், பதற்றம் அடைந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுரேஷ் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே மது பாட்டில்களில் தவளை, பூச்சி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இப்போது, குட்டிப் பாம்பே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது வாங்கும்போதே குட்டிப்பாம்பு இருந்ததா அல்லது வாங்கிய பிறகு கவனக்குறைவாக இருக்கும்போது பாட்டிலில் விழுந்துவிட்டதாக என விசாரணைக்குப் பிறகே தெரியவரும். 

மதுபாட்டிலில் பாம்பு கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மது நிறுவனம் எது என்றும் அதன் தயாரிப்புகள் எந்தெந்த மாவட்டங்களுக்குச் சென்றுள்ளது என்பது பற்றியும் அறிய முடியாத காரணத்தால் மதுப்பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

-ராயல் ஹமீது.

Comments