பாஜகவின் பைக் பேரணியில் வெறுக்கத்தக்க கோஷம், கல்வீச்சு! வன்முறையை தூண்டும் வகையில் பிரச்சாரம்!
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி பாஜகவினர் கோவையில் நடத்திய இருசக்கர வாகனப் பேரணியால் நேற்று பதற்றம் நிலவியது. கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று கோவையில் பரப்புரை மேற்கொண்டார்.
இதையொட்டி, கோவை புலியகுளம் பகுதியில் இருந்து தேர்நிலைத் திடல்வரை 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் இருசக்கர வாகனப் பேரணியை நடத்தினர். பா.ஜ.கவின் இருசக்கர வாகனப் பேரணியின்போது, டவுன்ஹால் பகுதியில் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. அதன்படி, சிலர் அங்குள்ள மசூதி அருகே வெறுக்கத்தக்க வகையில் கோஷங்கள் எழுப்பியதாகவும்,
அங்கிருந்த கடைகளை மூடச்சொல்லி தகராறு செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்லாமிய மக்கள், டவுன்ஹால் பகுதியில் பேரணி வரும்போது எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக இருதரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவரும் சூழ்நிலையில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அப்துல் வகாப் மாவட்ட ஆட்சியரிடமும், தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்யவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம் வரும்போது கடைகளை அடைக்கச் சொல்லி எவ்வித பிரச்னையும் வராத நிலையில், தற்போது உத்தரப்பிரதேச முதலமைச்சர் வருவதற்காக கடைகளை மூடச் சொல்வது எவ்வகையில் நியாயம் என சில வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் வருகையை ஒட்டி டவுன்ஹால் பகுதியில் கண்காணிப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தநிலையில், அனுமதியின்றி இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டதற்கும், அங்கிருந்த கடை மீது கல்வீசியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் நிலையிலேயே பாஜகவினர் இந்த அளவிற்கு வன்முறையில் ஈடுபடுகிறார்களென்றால், வெற்றி பெற்றால் என்னவாகும் என பொதுமக்கள் பெருத்த அச்சத்தில் உள்ளார்கள்.
-பாருக்,அருண்குமார்,கோகுல்.
Comments