அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் உண்டியலை உடைத்து திருட்டு!!

    -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜூப்லி கிணறு வீதியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆதிசக்தி விநாயகர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக, கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்வது இல்லை. ஆனால் அங்கு பூசாரி மட்டும் சென்று கோவிலை திறந்து பூஜை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பூஜை செய்ய பூசாரி சென்றபோது, கோவிலின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது.

இது குறித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைவதும், உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்செல்வதும் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. எனவே அந்த நபர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன் அந்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments