வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மாற்று தொழில் தொடங்கிய கனகராஜ்..!!
கோவை சேரன்மாநகர், அம்பாள் நகர் அருகே "கே எஸ் நவீன் ரீவைண்டிங் ஒர்க்ஸ்" என்ற குறுந் தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் கனகராஜ் கூறியதாவது. "மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்களை நம்பியே இயங்கி வருகின்றன. 20 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் செய்து வருகிறேன்.என்னுடைய அனுபவத்தில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்துள்ளேன்.
உதாரணமாக மின்வெட்டின் போது நெருக்கடியை எதிர் கொண்டோம்.
ஆனால் அப்போது போதுமான அளவு ஜாப் ஆர்டர் இருந்தது. மின்தடை மட்டும் பிரச்சனையாக இருந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு குறுந் தொழில் நிறுவனத்தினர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் கொரோனா நோய்த்தொற்று முதல் அலை காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு குறுந்தொழில் முனைவோர் வாழ்வாதாரத்தை மிகக் கடுமையாக பாதித்தது. முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை.
இந்த சூழ்நிலையில், இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது குறுந்தொழில் முனைவோர் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் தாறுமாறாக அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் விலை காரணமாக தற்போது ஐப் ஆர்டர்கள் கணிசமாக குறைந்து விட்டன. எனது நிறுவனத்தில் ஒரு ஊழியரை பணிக்கு வைத்துள்ளேன். அவருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியாத அவல நிலை தற்போது உள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலை எதிர்கொண்ட போது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக எனது நிறுவனத்தின் முன் இளநீர் விற்பனை செய்ய துவங்கினேன். நெருக்கடியான சூழ்நிலையில் அந்த வியாபாரம் என்னை காப்பாற்றியது.
எனவே இப்போது மீண்டும் கரும்பு சாறு விற்பனையும் கூடுதலாக தொடங்கி உள்ளேன். இதனால் பாதிப்பிலிருந்து மீண்டு வர முடிகிறது.
எனது வேண்டுகோள் என்னவென்றால் என்னைப் போலவே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து குறுந்தொழில் முனைவோர் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை கண்டு மனம் உடைந்து விடக்கூடாது. தைரியத்துடன் போராட வேண்டும். இதுவும் கடந்து போகும் என்ற மனநிலை கொள்ள வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையை கடத்தி விட்டால் மீண்டும் கோவை தொழில் நகரில் சகஜ நிலைமை திரும்பும்.
அந்த நாட்கள் வெகுதொலைவில் இல்லை.” இவ்வாறு, கனகராஜ் கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அணஸ், V. ஹரிகிருஷ்ணன்.
Comments