தமிழகத்தை கொரோனா அற்ற மாநிலமாக மாற்ற மூன்று மாதம் என்னிடம் கொடுங்கள்..!!

     -MMH
     கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘‘நேற்று ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் ஒரு சில கட்சிகளை மட்டும் அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதில் புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடுக்காதது ஏற்புடையதல்ல.

கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் அனைத்து கட்சி சார்பாக பஞ்சாயத்து குழுக்களை அமைத்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இவற்றை இரண்டு வாரங்களுக்கு முன்பே நான் பதிவு செய்துள்ளேன் தற்போது மீண்டும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

நாளுக்கு நாள் நாடு முழுவதும் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்படுபவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பதன் மூலம் நோய்த்தொற்றை நாம் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடியும். இந்தத் திட்டத்தை தமிழக ஆளுநர் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவில் உருமாறிய கொரோனா பெரும்பாலும் இளைஞர்களைத் தாக்கி வருவதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள மூன்று சிறப்பம்சங்களாக நான் முன்வைப்பது.

கட்டாயம் முகக்கவசம் அணிதல், ஹேண்ட் சானிடைசர் என்ற கிருமி நாசினியைப் பயன்படுத்துதல் மற்றும் கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதத்திற்கு பதிலாக அரசே முன் வந்து இலவச முகக்கவசம் வழங்க வேண்டும். அபராதம் விதிக்கும் முறை சரியானது அல்ல.

மே 1 முதல் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் அதன் இளைஞர் மற்றும் மாணவர் அணியைச் சேர்ந்த 100 பேர் கொண்ட குழு விழிப்புணர்வு பணி மற்றும் மக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி வழங்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரிதாக உருவாகவில்லை. நமது தேவையை பூர்த்தி செய்ய போதுமான ஆக்ஸிஜனை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டீல் ஆலைகள் அனைத்திலும் நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும். அரசு அதை முன்வந்து செயல்படுத்த வேண்டும். தொழில் சார்ந்த உற்பத்தியை நிறுத்தி வைத்து விட்டு மருத்துவ உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்.

இந்த சூழ்நிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரக் கூட்டங்களைத் தவிர்த்துவிட்டு, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். மற்ற நாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு இந்நிலையை மாற்ற வேண்டும்.

தற்போது உள்ள நிலை தொடர்ந்தால், விரைவில் பெரிய பொருளாதார பாதிப்புகளை சந்திக்க நேரிடும். அதை சாமானிய மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

130 கோடி மக்கள் வாழும் நாட்டிற்கு மத்திய அரசு இரண்டு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி இருப்பது எந்த வகையிலும் சரியானது அல்ல. இதனால்தான் இன்னும் 10 சதவிகித மக்களுக்கு கூட நாம் தடுப்பூசி போட இயலவில்லை. இன்னும் பல தடுப்பூசி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் தடுப்பூசி தட்டுப்பாட்டை ஒழித்து நாட்டின் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட இயலும்.

மேலும், தடுப்பூசி தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்க இருப்பதால் அவர்கள் நிர்ணயிக்கும் விலை மிக அதிகம் என்பதால், சாமானிய மக்களால் அவ்வளவு விலை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்படும். ஊசி போட்டுக் கொள்ள ஏதுவான சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும். விலை அதிகமாக இருந்தால் யாரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர மாட்டார்கள் இந்நிலை மாற வேண்டும்.

சலூன் கடைகள் உட்பட சிறிய காய்கறி கடைகளுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறந்து வைத்திருப்பது ஏன்? நோய்த்தொற்றை கட்டுப்படுத்த வாக்கு எண்ணிக்கையைக் கூட தள்ளி வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையைத் தள்ளி வைப்பதால், பெரிதாக ஒன்றும் நடந்து விடப்போவதில்லை. முதலில் நோய்த்தொற்றை கணக்கில் கொள்ளாமல் தேர்தலை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் ஊழல் மாயமாகி விட்டதாகக் கருதுகிறேன்.

என்னிடம் அதிகாரத்தை மூன்று மாத காலத்திற்கு ஒப்படையுங்கள். கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை நான் மாற்றிக் காட்டுகிறேன். கொரோனா அற்ற நாடாக இந்தியாவையும், தமிழகத்தையும் மாற்ற வேண்டியதே நம் முன் இருக்கும் கடமை ஆகும்.'' என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அணஸ், V. ஹரிகிருஷ்ணன்.

Comments