மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 வரை திறக்க அனுமதி! மற்ற கடைகள் திறக்க தடை! தமிழக அரசு புதிய கட்டுப்பாடு!!

  -MMH

தமிழகத்தில் மளிகை, காய்கறி கடைகள் திறப்பதற்கு மதியம் வரை மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துவருகிறது. ஏற்கெனவே, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்தநிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து இன்று மாலையில் ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கையில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க 26.04.2021 முதல் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர தனியாக செயல்படுகின்றன மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள் பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல எந்த தடையுமின்ற செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதி. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும்.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதியில்லை. மாநகராட்சி நகராட்சிப் பகுதிகளில் அழகு நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ருக்மாங்கதன், சென்னை.

Comments