அன்று தந்தைக்கு! இன்று மகனுக்கு! 1989-லிருந்து சட்டசபை பெயர்பலகை எழுத்தராக இருக்கும் மணி!!

    -MMH 

சென்னை: தந்தை-மகன் என இருவருக்கும் 'முதலமைச்சர்' என்ற பெயர் பலகை எழுதும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் சட்டமன்ற பெயர்பலகை எழுத்தர் மணி.

1989-ம் ஆண்டு முதல் சட்டமன்ற பெயர் பலகை எழுத்தராக உள்ள மணி, கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ், என இதுவரை 4 முதலமைச்சர்களுக்கு பெயர்பலகை எழுதியிருக்கிறார். அன்று கருணாநிதிக்கு ''முதலமைச்சர்'' என்று எழுதிய மணி, இன்று மு.க.ஸ்டாலினுக்கும் ''முதலமைச்சர்'' என்ற பெயர்பலகையை எழுதியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சி அமையவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் தலைமைச் செயலகத்தில் ஜரூராக நடைபெற்று வருகின்றன. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னின்று கவனித்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுக தொடர்புடைய படங்கள், பெயர்பலகைகள் எல்லாம் அங்கிருந்து அகற்றப்பட்டு முதலமைச்சர் அறை மற்றும் அமைச்சர்களின் அறை தூய்மை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதலமைச்சர் அறைக்கு முன்பாக மாட்டப்படும் ''மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்'' என்ற பெயர்பலகையை மணி என்பவர் எழுதியுள்ளார். இவர் கடந்த 1989-ம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்ற பெயர் பலகை எழுத்தளராக இருந்து வருகிறார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டால், அவர்கள் பெயரை பெயர் பலைகைகளில் திருத்தி எழுதுவது உள்ளிட்ட பணிகளை மணி கவனித்து வருகிறார்.

இதனிடையே இன்னும் திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகாத நிலையில், பெயர்பலகைகளுக்கு வண்ணம் பூசி அமைச்சரவை பட்டியல் வெளியானவுடன் அதில் இடம்பெற்றுள்ளவர்கள் பெயரை எழுதுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை கவனித்து வரும் பெயர்பலகை எழுத்தர் மணி, தந்தைக்கும், மகனுக்கும், முதலமைச்சர் என்ற பெயர்பலகையை எழுதும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

மணியிம் சித்திரமும், அவரது எழுத்துவடிவமும் பிடித்ததன் காரணமாகவே கருணாநிதி அவரை சட்டமன்ற பெயர்பலகை எழுத்தர் பணிக்கு கொண்டு வந்தார். பலகைகளில் தமிழ் எழுத்துக்களை முறையாக வரைவதில் மணிக்கு நிகர் யாருமில்லை என்பது தலைமைச் செயலக ஊழியர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே எதிர்க்கட்சித் தலைவருக்கும் இவர் தான் பெயர்பலகை எழுத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments