வந்தாச்சு கொரோனா தடுப்பு மருந்து! சாதித்த டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள்!!

       -MMH

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கக் கூடிய தடுப்பு மருந்தை பயன்படுத்த, டி.ஜி.சி.ஐ., எனப்படும், இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு எதிராக, தற்போது நாட்டில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இரண்டும், நம் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இதைத் தவிர, ரஷ்ய தயாரிப்பான, 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்தவும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளோருக்கு, 'ரெம்டெசிவிர்' உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இதை பயன்படுத்த, டி.ஜி.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.இது தொடர்பாக, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு, மிகச் சிறந்த பலன் அளிக்கக் கூடிய, உயிர் பலியை தடுக்கக் கூடிய, '2டிஜி' எனப்படும், '2 டி ஆக்சி டி குளுக்கோஸ்' என்ற தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

'இன்மாஸ்' எனப்படும், நியூக்ளியர் மருத்துவம் மற்றும் சார்பு அறிவியல் மையம், டி.ஆர்.டி.ஓ., ஆகியவை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனத்துடன் இணைந்து, இந்த மருந்தை தயாரித்துள்ளன. மூன்று கட்டங்களாக இந்த மருந்து பரிசோதனை செய்யப்பட்டு, அதில் சிறந்த பலன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இரண்டாவது அலை பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இது போன்றவர்கள், மிக வேகமாக பாதிப்பில் இருந்து மீள்வது, இந்த மருந்து பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பொடி வடிவில் உள்ள இந்த மருந்தை, தண்ணீரில் கரைத்து கொடுக்க வேண்டும். இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில் செயல்பட துவங்கும். வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டு, அது வெளியேற்றப்படுகிறது. இந்த மருந்தால், மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் குறைவதுடன், உயிர் பலியும் வெகுவாக குறைகிறது; ஆக்சிஜன் தேவையும் குறையும்.

குளுக்கோஸ் அடிப்படையிலான மருந்து என்பதால், நம் நாட்டிலேயே அதிகளவில் இதை தயாரிக்க முடியும்.தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்துகளைவிட, இந்த மருந்தை பயன்படுத்துவதால், 2.5 நாட்களுக்கு முன்பே, இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.தற்போதுள்ள மருந்துகளைவிட, இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால், ஆக்சிஜன் தேவை, 42 சதவீதம் குறையும். மூன்றாம் நாளில் இருந்தே, இதன் பலன் தெரிய வரும். வயதானவர்களுக்கும் சிறப்பான பலன்களை அளிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments