கோவையில் ஓட்டு எண்ணும் மையத்தில் மொபைல் போன் அனுமதியில்லை!!
கோவை:
'ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். மொபைல் போன் கொண்டு செல்ல யாருக்கும் அனுமதியில்லை' என்று கோவை கலெக்டர் நாகராஜன் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, ஜி.சி.டி., யில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் நாகராஜன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் நாகராஜன் பேசியதாவது:ஓட்டு எண்ணிக்கைக்கு, அலுவலர்கள், உதவியாளர்கள், நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்பட்டு விட்டது.
ஓட்டு எண்ணிக்கை மையம் வரும் அலுவலர்கள், ஊழியர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் யாரும் மொபைல் போன் கொண்டு வரக்கூடாது.தேர்தல் ஆணைய பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மட்டுமே மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, மத்திய, மாநில அரசு ஊழியர்களின் 15,260 தபால் ஓட்டுகள், ராணுவத்தினரின் 219 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.
8 மணிக்கு தபால் ஓட்டுகளும், 8:30 மணி முதல் இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும்.மேட்டுப்பாளையம் 30 சுற்று, சூலுார், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்துார் 34 சுற்று, கோவை வடக்கு 36 சுற்று, கோவை தெற்கு 26 சுற்று, சிங்காநல்லுார் 33 சுற்று, கிணத்துக்கடவு 35 சுற்று, பொள்ளாச்சி 23 சுற்று, வால்பாறை 21 சுற்று ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
ஓட்டு எண்ணிக்கை முழுவதும், வீடியோவில் பதிவு செய்யப்படும். கொரோனா தடுப்பு அம்சங்களுடன் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது.முடிவுகள் வெளியான பிறகு, வெற்றி பெற்ற வேட்பாளருடன் இரு நபர்கள் மட்டுமே சான்றிதழ் பெற அனுமதிக்கப்படுவர். வெற்றி கொண்டாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் நாகராஜன் தெரிவித்தார்.
-பீர் முஹம்மது, குறிச்சி.
Comments