சிங்கம்புணரி அருகே மூதாட்டியிடம் காதணிக்காக காது அறுப்பு!! செயின் பறிப்பு!!
சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், செட்டிகுறிச்சி சிவராமன் நகர் பகுதியில் வசித்து வருபவர் குப்பண்ணா(73). இவரது மனைவி சின்னம்மாள்(65). நேற்று மாலை சின்னம்மாள் தனது வீட்டின் முன்புறம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், மூதாட்டியிடம் அவருடைய மகனின் பெயரைச்சொல்லி, அவர் கேஸ் சிலிண்டர் புத்தகத்தை வாங்கி வரச் சொன்னதாகக் கூறி உள்ளார். அதை நம்பிய சின்னம்மாள், வீட்டிற்குள் சென்று கேஸ் சிலிண்டர் புத்தகத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரைப் பின்பற்றி வீட்டுக்குள் நுழைந்த அந்த மர்ம வாலிபர், மூதாட்டியின் கழுத்தில் கிடந்த
6 பவுன் எடை உள்ள இரண்டு சங்கிலிகளை அறுத்த பின்பு, மேலும் மூதாட்டி காதில் அணிந்திருந்த தண்டட்டி (காதணிக்கான வட்டார வழக்கு) என்னும் காதணியை அவிழ்க்க முடியாததால், காதணியைக் கைப்பற்ற காதோடு சேர்த்து அறுத்ததால், காதிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதைக்கண்ட வாலிபர் தண்டட்டியை அதே இடத்தில் போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.
வீட்டின் எதிர் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த குப்பண்ணா, மனைவி சின்னம்மாள் அலறிய சப்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது, வலது பக்க காது அறுந்து ரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ந்து, கூச்சலிட்டு அக்கம் பக்கத்தாரை உதவிக்கு அழைத்துள்ளார். மூதாட்டியை, அவர்கள் உதவியுடன் உடனடியாக பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். புழுதிப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் கலைச்செல்வன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் புகாரை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காது அறுந்த நிலையில் மருத்துவமனையில் ரத்தவெள்ளத்தில் சேர்க்கப்பட்ட சின்னம்மாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வீடு புகுந்து நடந்துள்ள செயின் பறிப்புக் கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த பதட்டம் அடைந்துள்ளனர்.
- அப்துல்சலாம், ராயல் ஹமீது.
Comments