கோவையில் கட்டுப்பாடுகள் தீவிரம்!!

      -MMH

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவையில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு விதமாக நடவடிக்கைகளை எடுத்தாலும் தொற்றின் தீவிரம் குறைவதாக தெரியவில்லை.

இந்த நிலையில் இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

மளிகைக் கடைகள், இறைச்சிக்கடைகள் மட்டும் திறந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் மேற்கூறிய கடைகள் தவிர அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகளும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும், காந்திபுரம் சிங்காநல்லூர் உக்கடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அவசியமின்றி சாலைகளில் சுற்றித்திரியபவர்களை பிடிக்கும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-I.அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.

Comments