மீண்டும் ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

  -MMH

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இன்னும் சில நாட்களில் பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதே அவரது வீட்டுக்கு அதிகாரிகள் படையெடுத்தனர். அவர்களில் சுகாதாரத்துறை செயலாளர் மட்டும், மற்ற அதிகாரிகள் போல அல்லாமல் ஒரு கையில் பூங்கொத்து இன்னொரு கையில் கொரோனா பரவல் தொடர்பான கோப்புகளோடு ஸ்டாலினை சந்தித்தார்.

முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார் ராதாகிருஷ்ணன். அதன் பிறகு நேற்று (மே 3) மீண்டும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள், திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நேற்று பகலில் நடந்த இந்த ஆலோசனையில் தமிழகத்தில் கொரோனா தொற்று இருபதாயிரத்தைத் தொட்டுவிட்டதையடுத்து ஊரடங்கு விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி பொறுப்பேற்க உள்ள முதல்வர் ஸ்டாலினுடன் அதிகாரிகள் விவாதித்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் ஊரடங்கே இப்போதைக்கு உடனடி வழி என்று சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

ஆனால் தமிழகத்தின் நிதி நிலைமை, ஊரடங்கு விதித்தால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிகட்டுவதற்கான நடவடிக்கை குறித்து ஸ்டாலின் யோசிக்கிறார். தேர்தல் முடிவுகளுக்கு முன்பே, திமுக ஆட்சிக்கு வந்தால் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது தொற்று அதிகமாகிக் கொண்டே இருப்பதால் அதிகாரிகள் ஸ்டாலினிடம் இதுகுறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும். பேருந்துகள், டாக்ஸி, ரயிலில் பயணிகள் 50% இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி. மளிகை, காய்கறிக் கடைகள் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். வணிக வளாகங்களில் உள்ள பலசரக்கு கடைகள் காய்கறிக் கடைகள் இயங்க அனுமதி இல்லை. 

தேநீர் கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். இறுதிச் சடங்குகள், இறுதி ஊர்வலங்களில் 25 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி தரப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 20 பேராகக் குறைக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியத் தேவைகளான மருத்துவத் தேவைகளுக்குச் செல்லலாம். அதேபோல் ரயில் நிலையம், விமான நிலையங்களுக்குச் செல்லலாம். 

மருந்தகங்கள் பால் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் இறைச்சிக் கடைகள் செயல்பட விதிக்கப்பட்ட தடை தொடரும். தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில் இன்று காலை 4 மணி முதல் 20-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- பாரூக்.

Comments