செப்டம்பர், அக்டோபரில் தொடங்கும், கொரோனா 3வது அலைக்கு தயாராக வேண்டும் - நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்......

 

-MMH

          இந்தியாவில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலை சமீப நாட்களாக குறைந்து வருகிறது. 4 லட்சத்துக்கு மேற்பட்டோரை தினமும் பாதித்து வந்த இந்த தொற்று தற்போது ஒன்றரை லட்சத்துக்கும் கீழே சரிந்து விட்டது. இதைப்போல உயிரிழப்புகளும் சரிந்துள்ளது. இதன்மூலம் கொரோனா 2-வது அலையை இந்தியாக சிறப்பாக நிர்வகித்து இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் கூறியுள்ளார். இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

கொரோனாவின் முதல் அலையை இந்தியா எதிர்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. அப்போது அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைகள் 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான நம்பிக்கையை கொடுத்தன. அதேநேரம் 2-வது அலை குறித்து தொற்றுநோய் நிபுணர்களின் வெளியிட்ட ஆய்வுகளும், அது வீரியமாக இருக்கும் என கூறவில்லை. ஆனால் இந்த முறை நடந்தேறிய மத நிகழ்வுகள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளால் 2-வது அலை மிகுந்த வேகமாக பரவியது.

எனினும் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், ஆக்சிஜன் வங்கிகள் உருவாக்கல், ஆக்சிஜன் வினியோகத்துக்கு தொழில்துறையின் உதவிகள் போன்றவற்றால் 2-வது அலையை சிறப்பாக நிர்வகித்திருக்கிறோம். ரெயில்வே, விமான நிலையங்கள், ஆக்சிஜன் போக்குவரத்துக்காக ராணுவம் போன்றவற்றையும் நாம் பயன்படுத்தி இருக்கிறோம். மொத்தத்தில் நியாயமான முறையில் பணிகளை மேற்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். கொரோனாவின் 2-வது அலையை சிறப்பாக கையாண்டதால், புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த அலை இளம் தலைமுறையினரை அதிக அளவில் பாதிக்கும் எனவும் எச்சரித்திருக்கின்றனர். இந்த அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடங்கும் என தெரிகிறது. எனவே இதை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நமது மருத்துவ கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

-வேல்முருகன் சென்னை.

Comments