காரை சுற்றி வளைத்ததால் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட பிரபல ரவுடி !!

 


-MMH

            காரை சுற்றி வளைத்ததால் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட பிரபல ரவுடியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். முன்னதாக போலீசாரிடம் இருந்து தப்பிக்க மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் அவரது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சிடி மணி என்ற மணிகண்டன் (வயது 40). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ஆரம்ப நாட்களில் சிடி விற்பனை செய்ததால் இவருக்கு சிடி மணி என பெயர் வந்தது. எப்போதும் சக ரவுடிகள் புடைசூழ வலம் வரும் இவர், அவ்வப்போது சொகுசு கார்களில் சுற்றி வருவார். எப்போதும் ஒரே காரில் பயணம் செய்ய மாட்டார். சொகுசு கார்களை அடிக்கடி மாற்றி பயணம் செய்வார்.

மிகுந்த பண பலம் உடைய இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்தவர், தனக்கு எதிரான ஒரு ரவுடியை தீர்த்து கட்டுவதற்கு சதித்திட்டம் தீட்டி வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார், சிடி மணி எங்கு பதுங்கி உள்ளார்? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் நாவலூர் பகுதியில் சிடி மணி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும் சிடி மணி தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். ஒரு கட்டத்தில் போலீசாரின் பிடியில் இருந்து சிடி மணி தப்பினார்.

இதற்கிடையில் போரூர் அருகே சிடி மணி காரில் வந்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது போரூர் மேம்பாலம் அருகே வந்த சொகுசு காரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கினார்கள். அந்த காரில் சிடி மணி இருப்பதை அறிந்த போலீசார், அவரை காரில் இருந்து கீழே இறங்கி வரும்படி கூறினர்.

ஆனால் காரில் இருந்து சிடி மணி கீழே இறங்காமல், காருக்குள் இருந்தபடியே துப்பாக்கியால் தனது காரை சுற்றி வளைத்த போலீசார் மீது 2 முறை சுட்டார். இதில் காரின் கண்ணாடியை துளைத்தபடி வெளியேறிய தோட்டா அங்கு நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கையில் பாய்ந்தது. இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.

உடனே காரில் இருந்து கீழே இறங்கிய சிடி மணி, அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனாலும் போலீசார் விடாமல் அவரை விரட்டிச்சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். முன்னதாக போலீசாரிடம் இருந்து தப்பிக்க சிடி மணி மேம்பாலத்தின் மேல் இருந்து கீழே குதித்தார். அதில் அவரது கை, கால் ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும், கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ரவுடி சிடி மணி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ரவுடி சிடி மணியிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிடி மணியிடம் இருந்து சொகுசு கார் மற்றும் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார், வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. காரில் இருந்தபடி துப்பாக்கியால் சுட்டதில் கார் கண்ணாடியை துப்பாக்கி குண்டு துளைத்து இருந்தது. அதனை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க சப்-இன்ஸ்பெக்டர் மீது பிரபல ரவுடி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

--வேல்முருகன் சென்னை.

Comments