இறந்த பாகனின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய யானை!! சோகத்தில் ஊர் மக்கள்!!

    -MMH

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலாவை சேர்ந்த மனோஜ் மற்றும் ராஜேஷ் சகோதரர்களுக்கு பல்லாட்டு பிரமாடதன் என்ற யானை ஒன்று உள்ளது. அந்த யானையை தாமோதரன் என்ற பாகன் கடந்த 25 ஆண்டுகளாக பராமரித்து வந்தார். தாமோதரன் அந்த யானையை தனது மகனை போலவே பாதுகாத்து வந்தார். 

மிடுக்கான தோற்றமும், கம்பீரமான நடையும் கொண்ட பல்லாட்டு பிரமாடதன் யானையை கேரளாவில் கோவில் விழாக்களுக்கு அழைக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவு பிரபலமானது. கேரளாவின் திருச்சூர் பூரம் விழா உள்பட முக்கிய விழாக்களில் யானை பிரமாடதன் பங்கேற்பது வழக்கம். 

இந்த நிலையில் தாமோதரன் புற்று நோயினால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையாக இருந்த பாகன் தாமோதரன் கடந்த 3ந் தேதி மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை தகனம் செய்வதற்கான வேலையை அவரது வீட்டாரும், உறவினர்களும் செய்து வந்தனர். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டின் வெளியே வைக்கப்பட்டு இருந்தது.

இது பற்றி அறிந்த யானை உரிமையாளர் ராஜேஷ் பல்லாட்டு, பாகனின் முகத்தை கடைசியாக பார்க்க யானையை தாமோதரன் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது தாமோதரனின் அருகில் வந்த அந்த யானை கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியது. மேலும் தன் தும்பிக்கையை தூக்கி பிளிறியது. அப்போது அங்கு இருந்தவர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி . ஈசா.

Comments