1000 கார்டுகளுக்கு மேல் இருந்தால் பிரித்து புதிய ரேஷன் கடைகள்! உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

-MMH

    தமிழகத்தில் தற்போது சுமார் 2.05 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், சுமார் 35,233க்கும் அதிகமான நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளைப் பிரித்து புதிய ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்றார். கடந்த ஆட்சியில் திறக்கப்பட்ட நடமாடும் ரேஷன் கடைகளுக்குப் பதிலாக பகுதிநேர கடைகள் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்த அவர், அதன்படி, பகுதிநேர ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்றார்.

தமிழ்நாட்டில் 8,000 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. அதற்கு சுமார் ரூ.18 கோடி வாடகை செலுத்தப்படுகிறது. இந்தக் கடைகளுக்கு விரைவில் சொந்த கட்டடம் கட்டப்படும் என்றும் அப்போது அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்தார்.

தமிழகத்தில் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தங்கு தடையின்றி துரிதமாக செயல்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments