சிங்கம்புணரியில் அப்பளம் போல் நொறுங்கும் புதிய கழிவுநீர்க் கால்வாய்கள்! விழித்துக் கொள்வார்களா அதிகாரிகள்!

  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக சாலையில் மழைநீர் தேங்காமல் வெளியேற கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

முக்கிய சாலையிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு செல்லும் சாலையின் முகப்பில் அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாய்கள் தரமில்லாமல் அமைக்கப்படுவதால், சிறிய அளவிலான கனரக வாகனங்கள் கடந்தாலே கால்வாய்கள் அப்பளம் போல நொறுங்கி வருகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல் சாலையில், காசியா பிள்ளை நகருக்கு முன்பு சாலையின் ஒரு பிரிவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கட்டிய சில தினங்களில் சேதமடைந்தது. அதையடுத்து உடனடியாக அதைச் சரி செய்து கால்வாயின் மேல்புறத்தில் புதிய கான்ங்ரீட் போடப்பட்டது.

அதன் பின்னர் பிளாசம் மண்டபம் அமைந்துள்ள சொர்ணபுரி நகருக்குச் செல்லும் பாதையின் முன்புறம் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணி நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டபின் ஒரு கனரக வாகனம் அந்தப் பாதையை கடந்தபோது கால்வாய் அப்பளம் போல் நொறுங்கி கனரக வாகனம் கால்வாய்க்குள் சிக்கியது. அந்த வாகனத்தை பெரும் போராட்டத்திற்குப் பின் மீட்டனர்.

சிங்கம்புணரி தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு நகரம். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கனரக வாகனங்கள் முக்கிய சாலையிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று வருவது என்பது தவிர்க்க முடியாதது. 

இந்நிலையில், பொதுமக்கள் இந்த கழிவு நீர் கால்வாய்களை கடக்கும்போது ஒருவிதமான பயத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தே, இந்தத் தரம் குறைந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருவதாக பொது மக்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது.

பெரும் அபாயங்கள் ஏதும் நிகழ்வதற்கு முன்னதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விழித்துக்கொண்டு, கால்வாய் கட்டும் பணிகள் அரசு நிர்ணயித்துள்ள தரத்தின்படி நடைபெறுகிறதா என ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- பாரூக், சிவகங்கை.

Comments