ஊராட்சிக்கு விநோத தண்டனை; நீதிபதி முகமது ஜியாவுதீன் தீர்ப்பு...!

 

-MMH

தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி அ.முகமது ஜியாவுதீன்.

ஐந்து மரங்களை தனது அலட்சியத்தால் வெட்டிய ஊராட்சிக்கு 100 மரக்கன்றுகளை நடுமாறு தீர்ப்பளித்து நீதிபதி முகமது ஜியாவுதீன் வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளார். தேனி மாவட்டம், ஸ்ரீரெங்கபுரம் பள்ளி தெருவை சேர்ந்தவர் பொறியாளர் சதீஷ்குமார். 

இவர், ஊராட்சி அலுவலக கட்டிடத்திற்கும், கூடுதல் கட்டிடத்திற்கும் இடையே விளையாட்டு மைதானத்திற்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு 22 மரக்கன்றுகளை நட்டு வளர்த்ததில் 12 கன்றுகள் மரமாகி செழித்து வளர்ந்திருந்தன. இந்நிலையில், நாவல், வாகை, அரச மரம் என 5 வகை மரங்களை மின்சார வழித்தடத்திற்கு இடையூறு என அதன் கிளைகளை வெட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஊழியர்கள் தவறாக புரிந்து கொண்டு 2021 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி 5 மரங்களை வெட்டித்தள்ளினர்.


தேனி மாவட்டம், ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி நிர்வாகம் கவனக்குறைவால்  வெட்டப்பட்ட மரங்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த சமூக ஆர்வலர் சதீஷ்குமார் பொது சேவை பயன்பாட்டுக்கான தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்றை ஜூலை 15 ம் தேதி தாக்கல் செய்தார். அந்த மனுவில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரங்களை தவறான உத்தரவு மூலம் தேவையின்றி ஊராட்சி நிர்வாகம், மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இந்த மனுவை தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும் மாவட்ட நீதிபதியுமான அ.முகமது ஜியாவுதீன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி தலைவர் பெருமாள், எழுத்தர் சுருளி, தேனி உதவி மின்பொறியாளர் புனித பத்மனாபன், தாடிச்சேரி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து மரம் வெட்டப்பட்ட வழக்கில் ஒரேநாளில் விசாரித்து தீர்ப்பையும் நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் வழங்கினார். அந்த தீர்ப்பில், அத்தியாவசிய காரணமின்றி, மரங்களை வெட்டக் கூடாது. ஸ்ரெங்கபுரத்தில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காரணமாக வெட்டப்பட்ட 5 மரங்களுக்கு ஈடாக 100 மரக்கன்றுகளை ஒரு மாதத்தில் நட்டு ஊராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும்.

இதுகுறித்து கண்காணித்து வி.ஏ.ஓ அறிக்கை தர வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். இந்த விசாரணையின் போது நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் பிரதாப்சிங், குமரேசன் உடன் இருந்தனர். நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் கூறுகையில், தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் இதுவரை 6 வழக்குகள் தாக்கல் ஆகியுள்ளன. மரம் வெட்டிய வழக்கில் ஒரேநாளில் விசாரித்து தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எளிதாகவும் விரைவாகவும், வழக்கு செலவின்றியும் தீர்வு காண தீர்ப்பாயத்தை பொதுமக்கள் நம்பிக்கையோடு அணுகலாம் என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கையும் நீதிமன்ற பணிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து அனைத்து ஊடகங்கள் மூலமும் நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் தெளிவாக விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டி வரும் நீதிபதி அ.முகமது ஜியாவுதீன்.

இதன்பயனாக நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகுவதால் ஏற்படும் அனுகூலங்களை பொதுமக்கள் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து நீதிபதியின் விழிப்புணர்வு நடவடிக்கையால் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகிய சதீஷ்குமாருக்கு நீதிபதி முகமது ஜியாவுதீன் வழங்கிய தீர்ப்பும் நீதித்துறை சரித்திரத்திலேயே முன்னுதாரணமாக திகழ்கிறது.

இந்த வித்தியாசமான ஊராட்சிக்கு கிடைத்த தண்டனை மேலும் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மற்ற ஊராட்சிகளுக்கு மரம் வெட்டக்கூடாது என்ற சவுக்கடியை தந்துள்ளதாகவும், பசுமைக்காவலராக நீதிபதி முகமது ஜியாவுதீன் விளங்குவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட மேற்கண்ட வழக்கு உதவியாக இருந்துள்ளது.

- ஊடகவியலாளன், பத்திரிக்கையாளன்,

-ஆர்.கே.பூபதி.

Comments