கோவையை சேர்ந்த வயதான தம்பதிகள், தங்களின் ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை, மா.கம்யூ.,கட்சிக்கு வழங்கியுள்ளனர் !!

 

-MMH

              கோவையை சேர்ந்த வயதான தம்பதிகள், தங்களின் ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை, மா.கம்யூ.,கட்சிக்கு வழங்கியுள்ளனர்.தொண்டாமுத்துார் பகுதியை சேர்ந்தவர் துளசிதாஸ்,80. இவருடைய மனைவி மலர்கொடி,74. இவர்களுக்கு, இரண்டு மகள்கள், மனவளர்ச்சி குன்றிய நிலையில், மூன்று மகன்கள் உள்ளனர்.ஓய்வுபெற்ற மின் ஊழியரான துளசிதாஸ், மின்வாரிய தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின், தொடக்க கால தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளார்.மின்வாரிய பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், கோவை கம்யூனிஸ்ட் கட்சியினருடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் ரூ.40 லட்சம் மதிப்பிலான, தனது வீடு, வங்கி வைப்பு தொகை உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும், மா.கம்யூ.,கட்சிக்கு, உயிலாக எழுதி வைத்துள்ளார். இதனை அக்கட்சியின், தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், எம்.பி.,நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, உள்ளிட்ட தலைவர்களிடம் வழங்கினார்.துளசிதாஸ் கூறுகையில், ''என் மகன்கள் மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளனர், எங்களுக்கும் வயது மூப்பு அடைந்து விட்டது. கடைசி நாட்களில் எங்களை பாதுகாக்க உறவுகள், அரசு என்பதை தாண்டி, நான் நேசித்த மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாக்கும். ஆகவே சொத்துக்கள் முழுவதையும், கட்சியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளேன், என்றார்.

-சுரேந்தர்.

Comments